வடக்கு மாகாணத்தில் இந்திய, இலங்கை நட்புறவு மையம்

வடக்கு மாகாணத்தில் சுமார் 300 கோடி ரூபா செலவில் இந்திய – இலங்கை நட்புறவு மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மையத்தின் பணிப்பாளர் பி.ஜெயரத்தினம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் நாகை மாவட்ட மக்கள் உருவாக்கியுள்ள நாகை மாவட்ட மக்கள் மன்றம் மற்றும் யாழ்ப்பாண ஆதீனம் ஆகியன இணைந்து குறித்த மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக நாகை மாவட்ட மக்கள் மன்றத்தால் தமிழகம் முழுவதும் 500 உண்டியல்கள் வைக்கப்பட்டு நிதி சேகரிக்கப்பட்டு வருவதாகவும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானின் சிலை தமிழகம் எங்கும் பவனியாக கொண்டு செல்லப்பட்டு நிதி சேகரிக்கப்படுவதுடன் இறுதியாக இலங்கையில் பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த நட்புறவு மையத்தின் ஊடாக சர்வதேச இந்து ஆலயம் ஒன்று நிறுவப்படவுள்ளதாகவும் இந்திய மற்றும் புலம்பெயர் மக்கள் தங்குவதற்கான 60 வீடுகளும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜெயரத்தினம் மேலும் தெரிவித்தார்.

மேலும் நூலகம், அன்னதான மண்டபம், யோகாசன பயிற்சிக் கூடம், கலையரங்கம், மருத்துவ முகாம், நீராடல் தடாகம் போன்றனவும் அமைக்கவுள்ளதாக ஜெயரத்தினம் குறிப்பிட்டார்.

Related Posts