வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராகிறார் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ?

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக தற்போதைய பிரதிப் பொலிஸ்மா அதிபரான அநுர சேனநாயக்கா நியமிக்கப்படுவார் என அறிய முடிகின்றது.

Anura Senenayake 3.png

தற்போதைய ஆளுநர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியின் பதவிக்காலம் அடுத்த மாதம் 30 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. அந்தச் சமயத்தில் தற்போதைய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்கா தமது பதவியிலிருந்து ஓய்வுபெற்று விடுவார் என்றும், அதையடுத்து அவர் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என்றும் அறியமுடிகின்றது.

அரச தலைமைப்பீடத்துக்கு மிக நம்பிக்கையானவரான அநுர சேனநாயக்கா, அடுத்த பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படக்கூடும் என முன்னர் எதிர்ப்பார்க்கப்பட்டது. அண்மையில் அவரது பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவிக்காலம் முடிவுற்ற சமயம் அது மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுமிருந்தது. அவரை அடுத்த பொலிஸ்மா அதிபராக நியமிக்கும் நோக்குடனேயே அந்தப் பதவி நீடிப்பு வழங்கப்பட்டதாகவும் கருதப்பட்டது.

எனினும், அரசுத் தலைமை தற்போதைய பொலிஸ்மா அதிபரே அப்பதவியில் தொடரட்டும் என்றும், அநுர சேனநாயக்காவை வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கலாம் என்றும் இப்போது முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது. வடக்கு மாகாணத்துக்குப் புதிய ஆளுநரை நியமிப்பதில் பல தரப்பிலிருந்தும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இதன் மூலம் தீர்க்கலாம் என்றும் அரசுத் தலைமை கருதுவதாகவும் தெரிகின்றது.

முன்னாள் படை அதிகாரி ஒருவரை இந்தப் பதவிக்கு நியமிப்பதை வடக்குத் தமிழர்களும், அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் மற்றும் சர்வதேச தரப்புகளும் அடியோடு விரும்பவில்லை என்பது அரசுத் தலைமைக்குப் பல தரப்பினராலும் உணர்த்தப்பட்டுள்ளது. ஆனால் பல்லாயிரம் படையினர் நிலைகொண்டுள்ள வடக்கு மாகாணத்தின் ஆளுர் பொறுப்பை படைத் தரப்புத் தகுதி இல்லாத ஒரு சிவிலியனிடம் ஒப்படைத்தால், படைத்தரப்பையும் அரவணைத்து அங்கு நிர்வாகத்தை முன்னெடுப்பது சிக்கலாக இருக்கும் என்று அரசுத் தலைமை கருதுகின்றதாம். இந்த இரண்டு பிரச்சினைகளையும் ஒரே சமயத்தில் சமாளிப்பதற்குப் பொருத்தமான ஆளாகப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்கா இருப்பார் என அரசுத் தலைமை நினைக்கிறது.

மூத்த பொலிஸ் அதிகாரி என்ற முறையில் வடக்கில் உள்ள படையினர் மற்றும் படை அதிகாரிகள் அவர் மீது மதிப்புக் காட்டுவர். அதனால் சிவில் நிர்வாக விடயங்களில் படைத் தரப்பினர் மீது அதிகாரத்தைப் பிரயோகிக்கக் கூடியவராக அவர் இருப்பார் என்று கருதப்படுகின்றது.

அதேசமயம், ஓய்வுபெற்ற மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவரை இப்பதவிக்கு நியமிப்பதை, சிவில் நிர்வாகத்தை இராணுவ மயப்படுத்தும் விவகாரமாக அர்த்தப்படுத்த முடியாது என்றும் அரசுத் தலைமை எண்ணுகின்றதாம். இந்தக் காரணங்களினாலேயே அவரை ஆளுநராக நியமிக்க அரசுத் தலைமை தீர்மானித்ததாக அறியமுடிகின்றது.

அநுர சேனநாயக்கா தென்னிலங்கையில் பெரும் வரவேற்பைப் பெற்ற சிங்கள மேடைப் பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பல சிங்களப் பாடல் கசெட்டுகள் வெளிவந்துள்ளன. சிங்கள மக்கள் மத்தியில் அவை அதிகம் வரவேற்பைப் பெற்றுள்ளன. சிங்கள வானொலிகளில் தினசரி அவரது பாடல்கள் ஒலிக்கின்றன. அவர் தமது பங்களிப்புடன் தனியான ஓர் இசைக் குழுவையும் வழிநடத்தி வருகின்றார். பொலிஸ் இசைப் பிரிவு அணியுடனும் அவர் பங்காற்றி வருகின்றார்.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு, மேல் மாகாண பொலிஸ் பிரிவு போன்றவற்றுக்கு அவர் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றியிருக்கின்றார். அண்மையில் – சில தினங்களுக்கு முன்னர் – பிற மதங்களை அவதூறு செய்த குற்றச்சாட்டின் பேரில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் வண.கலகொட அத்த ஞானசார தேரர் உட்பட நான்கு தேரர்களும், இரு சிவிலியன்களும் நீதிமன்றத்தில் முன்நிறுத்தப்பட்ட சமயம், பொலிஸ் தரப்பில் நேரடியாக இவரே நீதிமன்றில் பிரசன்னமாகி அந்த விடயங்களைக் கையாண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பொது பலசேனா’ சம்பந்தப்பட்ட விடயங்கள் போன்ற முக்கிய விவாரங்களைக் கையாள்வதற்காக அரசுத் தலைமையால் அவர் விசேடமாக நியமிக்கப்பட்டிருந்தார் என்றும், அதனால்தான் அந்த வழக்கிற்காக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தரத்தில் அவர் நேரில் பிரசன்னமானார் என்றும் கூட கூறப்பட்டது. அந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட வண.கலபொட அத்த ஞானசார தேரரையும் ஏனையோரையும் பிணையில் விடுவிப்பதற்கு பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்கா ஆட்சேபனை எதனையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts