22.12.2016 (வியாழக்கிழமை) அன்று நடைபெற்ற முதலாவது வடக்கு மாகாணசபையின் 72ஆவது அமர்வில்விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் கௌரவ பொ.ஐங்கரநேசன் தனது அமைச்சின் 2017ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடைச் சமர்ப்பித்து ஆற்றிய உரை.
கௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ முதல்வர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே,கௌரவ பிரதி அவைத்தலைவர் அவர்களே,கௌரவ மாகாணசபை உறுப்பினர்களே, மதிப்புக்குரிய பிரதம செயலாளர் அவர்களே,அமைச்சுகளின் செயலாளர்களே,திணைக்கள அதிகாரிகளே உங்கள் அனைவருக்கும், எங்கள் எல்லோரையும் இயக்குவித்துக் கொண்டிருக்கும் இயற்கை என்றபேரிறைவனுக்கும்; என் வணக்கங்களை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது அமைச்சின் கீழ் விவசாயத் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு ஆகிய 5 துறைகள் இயங்கிவருகின்றன. அத்தோடு, அமைச்சின் ஊடாக நீர் வழங்கல், உணவு வழங்கல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்புச் சேவைகளையும் வழங்கி வருகின்றோம். இவற்றுக்கான 2017 ஆம் ஆண்டுக்குரிய பாதீடு தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைப்பதற்கு முன்பாக, இந்த உயரிய சபையின் கவனத்துக்குச் சில விடயங்களைச் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக அமையும் எனக் கருதுகின்றேன்.
2016ஆம் ஆண்டுக்கான நிதி முன்னேற்றம்
2016ஆம் ஆண்டுக்கான பாதீடில் எனது அமைச்சுக்கு உட்பட்ட திணைக்களங்களினூடாக முன்னெடுக்க வேண்டிய அபிவிருத்தித் திட்டங்களுக்கென மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையாக (PSDG) 410 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. பின்னர்,இந்நிதிக்கு மேலதிகமாக குறை நிரப்பு ஒதுக்கீடாக கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்துக்கு 4 மில்லியன் ரூபாவும், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்துக்கு 15.16 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டது.மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திநன்கொடை நிதியாக (PSDG) எமது அமைச்சுக்குக் கிடைத்த இந்த 429.160 மில்லியன் ரூபாவில் இதுவரையில் 19.12.2016ஆம் திகதிய நிதிநிலை முன்னேற்ற அறிக்கையின்படி 379.94 மில்லியன் ரூபா பயன்படுத்தப்பட்டுள்ளது.
திணைக்களரீதியாகக் குறிப்பிடுவதாயின் விவசாயத் திணைக்களம் அதற்கு ஒதுக்கப்பட்ட 240 மில்லியன் ரூபாவில் 85விழுக்காடு நிதியையும், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் அதற்கு ஒதுக்கப்பட்ட 115 மில்லியன் ரூபாவில் 96 விழுக்காடு நிதியையும், நீர்ப்பாசனத் திணைக்களம் அதற்கு ஒதுக்கப்பட்ட 55 மில்லியன் ரூபாவில் 95 விழுக்காடு நிதியையும் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் அதற்கு ஒதுக்கப்பட்ட 19.16 மில்லியன் ரூபாவில் 64 விழுக்காடு நிதியையும் செலவிட்டுள்ளது. எமக்கு ஒதுக்கப்பட்ட 429.16 மில்லியன் ரூபாவில் சராசரியாக 89 விழுக்காடு நிதி முன்னேற்றத்தை எட்டியுள்ளோம்.
2016ஆம் ஆண்டுக்கான பாதீடில் எனது அமைச்சின் ஊடாகவும் அமைச்சுக்கு உட்பட்ட திணைக்களங்களின் ஊடாகவும் முன்னெடுக்கவேண்டிய வேலைத்திட்டங்களுக்கென பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியாக (CBG) 21.5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. பின்னர், இந்நிதிக்கு மேலதிகமாக குறை நிரப்பு ஒதுக்கீடாக கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்துக்கு 3 மில்லியன் ரூபாவும் நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கு 2.375 மில்லியன் ரூபாவும்கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் கட்டுமானப் பணிகளுக்கென 14.8 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டது. மொத்தமாக வழங்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியான 41.68 மில்லியன் ரூபாவில்19.12.2016 ஆம் திகதிய நிதிநிலை முன்னேற்ற அறிக்கையின்படி33.09 மில்லியன் ரூபா பயன்படுத்தப்பட்டுள்ளது.இது ஒதுக்கப்பட்ட 41.68 மில்லியன் ரூபாவில் 79 விழுக்காடு ஆகும்.
எமது திணைக்களங்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள பல வேலைத்திட்டங்கள் முழுமையாக முடிவுற்று அவற்றுக்குரிய நிதிக் கொடுப்பனவுகளும் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. சில வேலைத்திட்டங்கள் பௌதிக ரீதியாகக் கூடுதலான முன்னேற்றங்களைக் கண்டுள்ளன. எனினும் அவற்றுக்கான கொடுப்பனவுகள்இன்னமும் முழுமையாக மேற்கொள்ளப்படாமல் உள்ளது.கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் முல்லைத்தீவிலும் மன்னாரிலும் புதிதாக அமைத்து வரும் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் பணிமனைகளின் கட்டிட வேலைகள் யாவும் ஏறத்தாழப் பூர்த்தியாகியுள்ளன. எனினும் கட்டுநிதி பூரணமாக விடுவிக்கப்படாமையால் கொடுப்பனவுகள் முழுமை பெறவில்லை. அதேபோன்றேநீர்ப்பாசனத் திணைக்களத்தின் வேலைத்திட்டங்கள் யாவும்பூர்த்தியாகியுள்ளபோதும் கட்டுநிதி முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை. சில வேலைத்திட்டங்களின் செலவுச் சிட்டைகள் சரிபார்க்கப்படுதல் இன்னமும்முழுமை பெறவில்லை. கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தால் சிலவற்றுக்குக் கேள்வி கோரல்கள் மேற்கொள்ளப்பட்டு கொள்வனவுக் கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளபோதும் பொருட்கள் வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் இவை யாவும் இம்மாத இறுதிக்குள் பூர்த்தியாகுமெனஇந்த உயரிய சபைக்கு உறுதியுடன்தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆளணிப் பற்றாக்குறைவு
எமது திணைக்களங்களினால் மேற்கொள்ளப்படும் வேலைகளை வினைத்திறனுடன் முன்னெடுத்து உரிய காலத்தில் விளைபயன் மிக்கதாக நிறைவுறச் செய்வதில் நிர்வாகரீதியாக நாங்கள் பல சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சகல திணைக்களங்களிலும்ஆளணிப்பற்றாக்குறை பெரும் இடையூறாகவே உள்ளது. உதாரணத்துக்கு விவசாயத் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை இங்கே விரிவாகக்குறிப்பிடலாம் எனக் கருதுகின்றேன்.
மாகாண விவசாயத் திணைக்களத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்துப் பதவிகளுக்குமான 607 ஆளணியில் தற்போது 404 ஆளணியினரே கடமையாற்றி வருகின்றனர். அதாவது 203 வெற்றிடங்கள். அவற்றை நிரப்புவதற்கு நாங்கள் மேற்கொண்டுவரும் பகீரத எத்தனங்களையும் மீறி அவை இன்னமும் நிரப்பப்படாமலேயே உள்ளன.
இலங்கை விவசாய சேவைத் தரத்தினர் (17 வெற்றிடம்)
இலங்கை விவசாய சேவைக்குரிய உயர்மட்டப் பணிநிலைகளாக மாகாண விவசாயப் பணிப்பாளர், மேலதிக மாகாண விவசாயப் பணிப்பாளர்,பிரதி விவசாயப் பணிப்பாளர்கள், உதவி விவசாயப் பணிப்பாளர்கள் ஆகிய பணிநிலைகள் விளங்குகின்றன. மாகாண விவசாயத் திணைக்களத்தில் உதவிப்பணிப்பாளர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஆளணி 14.ஆனால்,இந்தப் பணிநிலையில் இன்று எவருமே நியமனம் பெறவில்லை. பிரதிப் பணிப்பாளர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஆளணி 06 ஆக இருந்தபோதும் 04 உத்தியோகத்தர்கள் மாத்திரமே பணிபுரிகின்றனர். கிளிநொச்சி மாவட்டப் பிரதி விவசாயப்பணிப்பாளருக்கான ஆளணி நிரப்பப்பட முடியாத நிலையில், தற்போது ஒப்பந்த அடிப்படையில் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலதிக மாகாண விவசாயப் பணிப்பாளருக்கான அனுமதிக்கப்பட்ட ஆளணி ஒன்றாக இருந்தபோதும் அந்த ஒன்று கூட இன்னமும் நிரப்பப்படாமல் வெற்றிடமாகவே நீடிக்கிறது. இலங்கை விவசாய சேவைத் தரத்தில் மொத்தமாக 24 ஆளணியினர் பணிபுரியவேண்டியவடக்கு விவசாயத் திணைக்களத்தில் தற்போது 05 உத்தியோகத்தர்கள் மாத்திரமே எல்லோரது கடமைகளையும் சேர்த்துச் சுமக்கின்றனர்.மாகாண விவசாய அமைச்சின் பணிகளை மாத்திரம் அல்லாது, தேசிய உணவு உற்பத்தித் திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்களையும் இந்தக் குறைந்த ஆளணியின் மூலமே நிறைவேற்ற வேண்டியும் உள்ளது.
இலங்கை விவசாய சேவைக்கான தமிழ்மொழி மூல உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை காரணமாகவே இந்த உயர் பதவிகளுக்கான வெற்றிடங்கள் இன்னமும் நிரப்பப்படாமல் உள்ளன. தமிழ்மொழி மூலப் பரீட்சையில் தோற்றிப் பலர் சித்தியடைந்தபோதும் நேர்முகத் தேர்வில் இவர்கள் தேர்வாகாமல் உள்ளனர். இப்படி நேர்முகத் தேர்வில் தெரிவாகாத 11 பேர் வடக்கு கிழக்கில் உள்ளனர். இவர்களை உள்ளீர்க்குமாறு, அல்லது 2003ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் வடக்குக் கிழக்குக்கென்று தனியாகப் பரீட்சை ஒன்றை நடாத்திஅதிகாரிகளைத் தெரிவுசெய்தது போன்று இலங்கை விவசாய சேவையிலும் வடக்கு கிழக்குக்கெனத் தனியான ஒரு பரீட்சையின் மூலம் வெற்றிடங்களை நிரப்புமாறு கௌரவ ஜனாதிபதி அவர்களினதும் கௌரவ மத்திய விவசாய அமைச்சர் அவர்களினதும் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம்.
விவசாயப்போதனாசிரியர்கள் (58 வெற்றிடம்)
விவசாயிகளுடன் நேரடியாகத் தொடர்பாடி விரிவாக்க சேவையை முன்னெடுப்பதில் விவசாயப் போதனாசிரியர்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது. அனுமதிக்கப்பட்ட 161 விவசாயப் போதனாசிரியர்களது ஆளணியில் தற்போது 103 விவசாயப் போதனாசிரியர்களே கடமையாற்றி வருகின்றனர். 58 வெற்றிடங்கள் நிலவுகின்றன.இப்பதவிக்கான ஆட்சேர்ப்புத் திட்டத்தில் கோரப்பட்டுள்ள தகுதியான விவசாய டிப்ளோமாவைப் பூர்த்தி செய்தவிண்ணப்பதாரிகள் போதியளவு இல்லாத காரணத்தால் இந்த வெற்றிடங்களை நிரப்பமுடியாத நிலையே நீடிக்கிறது.
இவ்வெற்றிடங்களை ஓரளவு நிவர்த்தி செய்வதற்காக க.பொ.த உயர்தரத்தில் விஞ்ஞான பாடத்தில் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்த விண்ணப்பதாரிகளை விவசாயப் போதனாசிரியர் பயிற்சித்தரம் என்னும் பதவிக்குள் ஆட்சேர்ப்புச் செய்து இலங்கை விவசாயக் கல்லூரிகளுக்கு விடுவித்து விவசாய டிப்ளோமாவை (N.V.Q Level – 6)பூர்த்தி செய்ய வைப்பதன் மூலம் விவசாயப் போதனாசிரியர்களாக நிரந்தர நியமனம் வழங்கப்படுகிறது.
தொழில்நுட்ப உதவியாளர் (விவசாய விரிவாக்கம்) (110 வெற்றிடம்)
தொழில்நுட்ப உதவியாளர் (விவசாய விரிவாக்கம்) பதவிக்கு அனுமதிக்கப்பட்ட 140 ஆளணியில் 30 உத்தியோகத்தர்களே கடமையாற்றி வருகின்றனர். இப்பதவிக்கான ஆளணியும் முழுமையாக நிரப்பப்படாமைக்கு விவசாய டிப்ளோமாவைப் (N.V.Q Level – – 5)பூர்த்தி செய்த விண்ணப்பதாரிகள் பற்றாக்குறைவாக இருப்பதே காரணம் ஆகும்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் (16 வெற்றிடம்)
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அனுமதிக்கப்பட்டுள்ள ஆளணி 65. இவ்வாளணியில் தற்போது 16 வெற்றிடங்கள் நிலவுகின்றன. திணைக்களத்தின் நிதி, நிர்வாக மற்றும் தொழில்நுட்பக் கடமைகளை வினைத்திறனாக முன்னெடுப்பதில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களது பங்களிப்பு மிகவும்இன்றியமையாதது. வேறு திணைக்களங்களில் விவசாயப் பட்டதாரிகளாக உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை விவசாயத் திணைக்களத்தில் கடமையாற்றுவதற்கு ஏதுவாக விடுவிப்பின் விவசாய அபிவிருத்திச் செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுத்துச்செல்ல இயலும்
விவசாயத் திணைக்களம் ஆளணிப் பற்றாக்குறையால் சேவைகளை வழங்குவதில் கடும் நெருக்கடிகளை எதிர் கொண்டபோதும் தன் சக்திக்கு மீறி உழைத்ததன் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சில அடைவுகளை எட்டியிருக்கிறது என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
நெல் உற்பத்தியில் தன்னிறைவு
நெல் உற்பத்தியில் வடக்குமாகாணம் தன்னிறைவு கண்டுள்ளது. 2014ஆம் ஆண்டில் 70,212 ஹெக்டயர் பரப்பில் 100,714 மெற்றிக்தொன் நெல்லும், 2015 ஆம் ஆண்டில் 105,735 ஹெக்டயர் பரப்பில் 324,294 மெற்றிக் தொன் நெல்லும் 2016 ஆம் ஆண்டில் 107,321 ஹெக்டயர் விஸ்தீரணத்தில் 300,662 மெற்றிக்தொன் நெல்லும் விளைவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இரணைமடுக்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தவேலைகள் காரணமாகச் சிறுபோக நெற்செய்கை 2400 ஹெக்டயர் பரப்பளவிலேயே மேற்கொள்ளப்பட்டது. அத்தோடு, இந்த ஆண்டு போதிய மழை வீழ்ச்சி இன்மை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் உற்பத்தி குறைவடைந்துள்ளது. இதனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு நெல் உற்பத்தி சிறிதளவால் குறைவடைந்துள்ளது. உற்பத்தியில் 170,000 மெற்றிக் தொன் நெல் வடக்கு மாகாண மக்களின் நுகர்வுக்குப் போதுமானது. மிகை உற்பத்தி ஏனைய மாகாணங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பயிரிடப்படும் பரப்பளவிலும், உற்பத்தி அளவிலும் மிளகாய், சின்னவெங்காயம், பெரிய வெங்காயம், நிலக்கடலை, சோளம், பயறு போன்றவையும் 2014ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளன.இந்த ஆண்டு வடக்கின் நிலக்கடலை உற்பத்தி 7917 மெற்றிக் தொன்கள். தேசிய உற்பத்தியில் இது 37 விழுக்காடு ஆகும், இதற்கான பெருமை,மாவட்டரீதியாக நிலக்கடலை உற்பத்தியில் தொடர்ந்தும் முன்னணியில் நிற்கும் முல்லைத்தீவு மாவட்டத்தையும் அதன் விவசாயிகளையுமே சாரும்.
இந்த ஆண்டு வடக்கில் 3585 மெற்றிக்தொன்கள்உழுந்து விளைவிக்கப்பட்டுள்ளது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது இது குறைவானது. உழுந்து அதிகம் உற்பத்தி செய்யப்படும் வவுனியா மாவட்டத்தில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்ந்த பெருமழை காரணமாகப் பயிரிடப்படும் நிலப்பரப்பு குறைவடைந்தமையே உற்பத்திக் குறைவுக்குக் காரணம் ஆகும். எனினும் இந்த உழுந்து உற்பத்தியும் தேசிய அளவில் 37 விழுக்காடு பங்களிப்பை வழங்கியிருக்கிறது.
இலங்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இன்று வடக்கு விவசாயத்துறை குறிப்பிட்டுச் சொல்லும்படியான பங்களிப்பை வழங்கிவருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தேசிய ரீதியில் 5.8 விழுக்காடு பங்களிப்பையும் மாகாண ரீதியில் 15 விழுக்காடு பங்களிப்பையும் வடக்கு விவசாயத்துறை வழங்கியுள்ளது. மாகாணரீதியில் 16.3 விழுக்காடு வழங்கி முதலிடத்தில் உள்ள ஊவா மாகாணத்துக்கு அடுத்த இரண்டாவது இடத்தை எமது வடக்கு மாகாணம் பெற்றுள்ளது என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன். போரினால் பாதிக்கப்பட்ட ஒரு மாகாணம் என்ற அளவில் வடக்கு மாகாணம் விவசாயத்துறையில் எட்டி இருக்கும் இந்த அடைவை எமது மாகாணத்துக்கு கிடைத்த ஒரு பெருமையாகவே கருதுகிறேன்.
அம்மாச்சி – வடக்கின் பாரம்பரிய உணவகம்
தமிழர்களின் ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகளின் நுகர்வை மீளவும் எம்மக்களிடையே அதிகரிக்கச் செய்யும் நோக்கில் விவசாயத் திணைக்களத்தின் ஊடாக அம்மாச்சி என்ற பெயரில் வடக்கின் பாரம்பரிய உணவகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனை நிர்வகிக்கும் பொறுப்பு விவசாயப் பண்ணைப் பெண்கள் அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதன் மூலம் எமது விவசாயப் பெண்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுவதோடு, உள்ளுர் விவசாய உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. இதுவரையில் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் சொந்தக் கட்டிடங்கள் உருவாக்கப்பட்டுஅம்மாச்சி உணவகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. மன்னாரிலும், யாழ்ப்பாணத்திலும் அம்மாச்சி உணவகத்துக்கானகட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.
விவசாயக் கிணறுகள் புனரமைப்பு
யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலத்தடி நீர்வளம் விவசாய இரசாயனங்களின் கலப்புக்கு ஆளாகி வருவது யாவரும் அறிந்ததே. விவசாயக் கிணறுகள் மிக நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமல் சிதிலமடைந்து காணப்படுவதும் விவசாய இரசாயனங்கள் நிலத்தடி நீரில் கலப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு யூல் பவர் மற்றும் பீற்றா பவர் காற்று மின் ஆலைகள் பிரதம செயலாளரோடு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்துக்கு அமைவாக எமது அமைச்சுக்கு வழங்கும் வணிக நிறுவனங்களுக்கான சமூகக் கடப்பாட்டு நிதியில் இருந்து 242 விவசாயக் கிணறுகள் இந்த ஆண்டு புனரமைக்கப்பட்டுள்ளன. இதற்கு கடந்த ஆண்டுக்குரிய 20 மில்லியன் ரூபாவும், இந்த ஆண்டுக்குரிய நிதியில் இருந்து 10 மில்லியன் ரூபாவுமாக 30 மில்லியன் ரூபா பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றோடு, தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தில் மிளகாய்ச் செய்கை ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் மத்திய விவசாய அமைச்சால் மன்னாரில் 27 விவசாயக் கிணறுகளும், வவுனியாவில் 18 விவசாயக் கிணறுகளும் புனரமைக்கப்பட்டுள்ளன.
பால் உற்பத்தி அதிகரிப்பு
கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களமும் மட்டுப்படுத்தப்பட்ட ஆளணியையும் பௌதிக வளங்களையும் கொண்ட திணைக்களமாக இருந்தபோதும் கடந்த 3 ஆண்டுகளில் சில துறைகளில் படிப்படியான ஆனால் குறிப்பிட்டுச் சொல்லும்படியான வளர்ச்சியை எட்டியுள்ளது. வடக்கில் நாள் ஒன்றுக்கு 2014 ஆம் ஆண்டில் 64,805 இலீற்றர்களாக இருந்த பால் உற்பத்தி 2015 ஆம் ஆண்டில் 90,246 இலீற்றர்களாகவும் 2016 ஆம் ஆண்டு 108,440 இலீற்றர்களாகவும்; உயர்ந்திருக்கிறது. 2014ஆம் ஆண்டு 20,533 பசுக்களும், 2015 ஆம் ஆண்டு 28,399 பசுக்களும் நடப்பு 2016 ஆம் ஆண்டு 31,058 பசுக்களும் செயற்கை முறையில் சினையூட்டப்பட்டுள்ளன. இந்த ஆண்டு செயற்கை முறைச் சினைப்படுத்தலில் தேசிய அளவில் வடக்கு மாகாணம் முதலாவது இடத்தை பெற்றிருக்கிறது. செயற்கை முறைச் சினைப்படுத்தல் என்பது மாடுகளின் இனவிருத்திச் செயற்பாடு மாத்திரம் அல்ல.இது ஒரு தரவிருத்திச் செயற்பாடும் ஆகும். இச்செயற்பாட்டின் மூலம் அதிக பால் உற்பத்தியைத் தரக்கூடிய தூய அல்லது கலப்பினப் பசுக்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரித்துள்ளது.
கோழிக்குஞ்சுகளின் விநியோகமும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தே வந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு 49,888 கோழிக்குஞ்சுகளும், 2015 ஆம் ஆண்டு 50,561 கோழிக்குஞ்சுகளும் இந்த ஆண்டு 88,300 கோழிகுஞ்சுகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன.இக்கோழிக்குஞ்சுகள் எமது பிரதேசத்தின் காலநிலையைத் தாக்குப்பிடிக்கக்கூடிய, நாட்டுபிறக் கோழிகளைவிடக் கூடுதலான முட்டைகளை இடக்கூடிய, அதிக பராமரிப்புத் தேவைப்படாத கொல்லைப்பிறக் கோழிகள் என்ற வகையைச் சார்ந்தவை ஆகும். இவையாழ்ப்பாணத்தில் அச்சுவேலியிலும்,வவுனியாவில் பூந்தோட்டத்திலுள்ள எமது திணைக்களத்துக்கு சொந்தமான இனவிருத்திப் பண்ணைகளிலும், மன்னாரில் உள்ள கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்துக்கு சொந்தமான பண்ணையிலும் விருத்தி செய்யப்படுகின்றன.வடக்கு மாகாணத்தின் நாளொன்றுக்கான சராசரி முட்டை உற்பத்தி இரண்டு இலட்சத்தை நெருங்கியுள்ளது. இவற்றின் மூலம் போரால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதிலும், அவர்களுக்கான போசணை ஊட்டலிலும் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் காத்திரமான பங்களிப்பை நல்கியுள்ளது.
தொண்டைமானாறு தடுப்பணை, இரணைமடுக்குளம் மற்றும் முத்தையன் கட்டுக்குளம்; ஆகிய மூன்றினதும் புனரமைப்பு மிகப்பெருமளவு நிதியும் கூடுதல் கவனமும் தேவைப்படும் வேலைத்திட்டங்கள். அந்த வகையில், வடக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் தனது வருடாந்த மராமத்துப் பணிகளுடன் இம் மூன்று வேலைத் திட்டங்களையுமே இந்த ஆண்டுக்குரிய பிரதான வேலைத்திட்டங்களாக முன்னெடுத்திருந்தது.
தொண்டைமானாறு தடுப்பணைப் புனரமைப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி நீரேரியினை நன்னீர் ஏரியாக மாற்றும் செயற்றிட்டத்தில் தொண்டைமானாறு தடுப்பணைப் புனர்நிர்மாண வேலைகள் நடைபெற்று வருகின்றன. மேற்குறித்த வேலைகளில் குடிசார் வேலைகள் 100.00 மில்லியன் இற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பிரதான அணைக்கட்டின் குடிசார் வேலைகளும் இரு வெள்ளநீர்த் தடுப்பணை வேலைகளும் இக் குடிசார் வேலைகளுள் அடங்குகின்றன. தற்போழுது 20 வீதமான வேலைகள் நிறைவுற்றுள்ளன. இயந்திரவியல் வேலைகளுக்கு 300.00 மில்லியன் இற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அதில் 15 வீதமான வேலைகள் தற்பொழுது நிறைவுற்றுள்ளன. அடுத்த ஆண்டின் இறுதியில் நிறைவுறவுள்ள இத்திட்டம் இப்பிராந்தியத்தின் நிலத்தடி நீர் நன்னீராக மாறுவதற்கான உந்துசக்தியாக அமையும். இதன் மூலம்வடமராட்சி நீரேரிக்கு அணித்தாகவுள்ள கோப்பாய், பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி, மருதங்கேணி மற்றும் பளை பிரதேச பிரிவுகளில் உள்ள 80,000 விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களது குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீர்த்தேவை உறுதிசெய்யப்படும்.
இரணைமடுக்குளப் புனரமைப்பு
இரணைமடுக்குளப் புனரமைப்பு இரண்டு வௌ;வேறு நிதிமூலங்களைப் பயன்படுத்தும் திட்டங்களாக அமைந்துள்ளது. முதலாவது, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலகு கடன் வசதியின் கீழ் குளக்கட்டையும் குளத்தின் உட்பகுதியையும் புனரமைக்கும் திட்டமாகும்.
இத்திட்டத்தின் கீழ் குளத்தின் அணைக்கட்டினைஇரண்டு அடியால் உயர்த்தியும் குளத்திற்கான மூன்று புதிய வான்கதவுகள் பொருத்தியும் மற்றும் ஏனைய 11 வான் கதவுகளுமாக 14 வான் கதவுகளும் மின்சாரம் மூலம் இயங்கக்கூடியதாகவும் புனருத்தாரணம் செய்யப்பட்டு வருகிறது. அத்தோடு, அணைக்கட்டின் உட்புறத்தில் நீரின் அலைத்தாக்கத்தை கட்டுப்படுத்த கண்டகல் அடுக்கப்பட்டு வான் ஓடும் வாய்க்கால்கள் அதற்கான கட்டமைப்புகள் மற்றும் வான் ஓடும் ஆற்றுக்குக் குறுக்கே 150 மீற்றர் நீளமான மிகப்பெரிய பாலமும் மேலும் திருவையாறு ஏற்று நீர்ப்பாசனமும்; அதற்கு கீழான சகல நீர் விநியோக வாய்க்கால்களும் புனரமைக்கப்பட இருக்கின்றது.
அடுத்துவரும் பெரும் போகம் மற்றும் சிறுபோகத்துக்குத் தேவையான நீரைத் தேக்கி வைத்துப் பயிர்ச் செய்கையைத் தங்குதடையின்றி மேற்கொள்ளத்தக்க வகையில் சகல வேலைகளும் திருப்திகரமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.இத்திட்டம் 2017 ஆம் ஆண்டு மார்கழி மாதம் முடிவுறுத்தப்படும். முடிவுறுத்தப்பட்டபின் இக்குளத்தின் கொள்ளளவானது 131MCM இலிருந்து 148MCM ஆக அதிகரிக்கும்.
இரண்டாவது, சர்வதேச விவசாய அபிவிருத்தி நிதியத்தின் (International Fund for Agrculture Development – IFAD) 22.23 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி ஈட்டத்தில் இரணைமடுக்குளத்தின் கீழே, மேற்கொள்ளப்பட்டுவரும்திட்டமாகும். இதில் பிரதான வாய்க்கால்கள், கழிவு வாய்க்கால்களை புனரமைக்கும் பணிகளோடு உட்கட்டுமான வசதிகளாக நெல் உலர்த்தும் தளங்கள், நெல் சேமிக்கும் களஞ்சியங்கள், விவசாயக்கிணறுகள் மற்றும் கமக்கார அமைப்புகளுக்கான பொதுநோக்கு மண்டபம் அமைக்கும் வேலைகளும் இடம்பெற்று வருகின்றன. அத்தோடு, இத்திட்டத்தின் ஊடாக பயிர் மாற்றுத்திட்டம், இணைக்கொடையின் மூலம் பசுக்கள் வழங்குதல் போன்றவையும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டமும் 2017ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிவுறுத்தப்படும். இவ்விரண்டு திட்டங்களும் நிறைவேறும்போது,இக்குளத்தின் கீழ் பெரும்போகம் முழு அளவிலும் சிறுபோகமானது மொத்தப் பயிர்ச்செய்கை விஸ்தீரணத்தின் 40விழுக்காட்டில் இருந்து 60விழுக்காடு ஆகவும் அதிகரிக்கப்படும். இதனால் ஏறத்தாழ 10000 குடும்பங்கள் முழுப்பயனை அடையக்கூடியதாக இருக்கும்.
அணைக்கட்டு பாதுகாப்பு மற்றும் நீர் வள அபிவிருத்தித் திட்டம்
அணைக்கட்டுப் பாதுகாப்பு மற்றும் நீர் வள அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் முத்தையன்கட்டுக் குளத்தில் ரூபா 600 மில்லியன் செலவில் தலைமை அணை வேலைகள் மற்றும் துரிசு வான் திருத்த வேலைகள் வான் வழிந்தோடும் வாய்க்கால்கள் மற்றும் மின்னிணைப்பில் இயங்கக்கூடிய வான் கதவு வேலைகள் புனரமைக்கப்பட்டு முடிவுறும் நிலையில் உள்ளது. இப்புனரமைப்பின் பின்னர் 6112 ஏக்கர் விஸ்தீரணமான பகுதியில் பயிர்ச்செய்கை முற்றாக செய்யக்கூடியவாறு இருக்கும்.மேலும்,மன்னார் மாவட்டத்தில் பெரிய பண்டி விரிச்சான் குளத்திற்கான தலைமை அணை வேலைகள் (Head works )மற்றும் வான் திருத்த வேலைகள், வான் வழிந்தோடும் வாய்க்கால்கள் (spill& spill tail channel) என்பன ரூபா 52.2 மில்லியன் செலவில் உலகவங்கியின் உதவியுடன் புனரமைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இப்புனரமைப்பின் மூலம் 606 ஏக்கர் விஸ்தீரணமானநிலம் பயிர்செய்கை செய்யக்கூடியதாக இருக்கும்.
கூட்டுறவு ஊழியர்களுக்கு 30 விழுக்காடு சம்பள அதிகரிப்பு
கூட்டுறவு மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட விடயப்பரப்பாக இருந்தபோதும், கூட்டுறவு அமைப்புகள் சுயாதீனமானவை என்ற அடிப்படையில் அவற்றின் மீது கூட்டுறவுத் திணைக்களங்கள் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களையே கொண்டிருக்கின்றன. கூட்டுறவை மீண்டும் வெற்றிகரமான ஒரு அமைப்பாகப் பலப்படுத்துவதற்கு வடமாகாண கூட்டுறவு நியதிச் சட்டம் ஒன்றின் அவசியம் உணரப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த 2015 ஆம் ஆண்டில் கூட்டுறவுத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட 100 நாள் வேலைத்திட்டத்தில் ஒன்றாக நியதிச்சட்டம் தயாரிக்கப்பட்டு நியதிச்சட்டக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும், நியதிச் சட்டக் குழு ஏனைய பல நியதிச்சட்டங்களைப் பரீசீலிக்கவேண்டியிருந்ததால்,தாமதமாகவே இதனைப் பரிசீலனைக்கு எடுத்திருந்தது. தற்போது இந்நியதிச்சட்டம்மாகாணசபையில் சமர்ப்பிக்கப்படுவதற்காகப் பேரவைச் செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.கௌரவ அவைத்தலைவர் அவர்களை கூட்டுறவு அபிவிருத்தி நியதிச் சட்டத்தையும், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு நியதி சட்டத்தையும் அடுத்த ஆண்டின் தொடக்கத்திலேனும் சபையில் சமர்ப்பிக்க ஆவன செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்.
கூட்டுறவுத் திணைக்களம் 2015ஆம் ஆண்டும், 2016ஆம் ஆண்டும் முன்னெடுத்த 100 நாள் வேலைத்திட்டத்தின் ஊடாகப் பணியாளர்களுக்கு 30 வீத சம்பள உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆளணி வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு பதவி நிர்ணயம் செய்யப்படாத 150 பணியாளர்களுக்குப் பதவி நிர்ணயங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டன. சில கிராமிய வங்கிகள் கணினி மயப்படுத்தப்பட்டதோடு, கிராமிய வங்கி சேமிப்பு மாதத்தின் ஊடாக 40.13 மில்லியன் ரூபா கிராமிய வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளன. தொழிலின்போது மரணம் அடைந்த பனை தென்னை வள உற்பத்தித் தொழிலாளிகளினதும், கடற்றொழிலாளிகளினதும் குடும்பங்களுக்கு வாழ்வாதார நிதியாக ரூபா ஒரு இலட்சம்வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாகாணசபை தோற்றம் பெற்ற 2013ஆம் ஆண்டின் காலப்பகுதியில் இருந்துஇது வரையில் பனைத்தொழிலின் போது இறந்த 7 உறுப்பினர்களது குடும்பங்களுக்கும், கடற்றொழிலின்போது இறந்த 29 உறுப்பினர்களது குடும்பங்களுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இயங்காத நிலையில் இருந்த கால்நடை உற்பத்தியாளர் சங்கத்துக்குச் சொந்தமான பால் பதனிடும் தொழிற்சாலையை மன்னாரில் உள்ள அடம்பன் பயோ பிறைவேற் என்ற தனியார்நிறுவனத்தின் பங்களிப்புடன் இயங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.யாழ்ப்பாணத்தில் யாழ்கோ நிறுவனத்திலும் இத்தகைய ஒரு பால்பதனிடும் நிலையமொன்றை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. கூட்டுறவின் தந்தை என அழைக்கப்படும் வீரசிங்கம் பெருமகனாரின் நினைவு அஞ்சல் தலை இந்த ஆண்டிலேயே வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
2017 ஆம் ஆண்டின் நிதி ஒதுக்கீடு
2016ஆம் ஆண்டில் அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய பூரணமான விபரங்கள் அடங்கிய தொகுப்பு விரைவில் கௌரவ உறுப்பினர்கள் அனைவருக்கும் கையளிக்கப்பட இருப்பதால் மேலதிகமான விபரிப்புகளை இங்கே தவிர்த்துக்கொண்டு 2017ஆம் ஆண்டுக்குரிய ஒதுக்கீடுகள் குறித்து சிலவற்றை இங்கே பதிவு செய்கின்றேன்.
எனது அமைச்சுக்கு உட்பட்ட துறைகளின் ஊடாக 2017ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கென மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியாக (PSDG) நிதி ஆணைக்குழுவிடம் நாம் 14105 மில்லியன் ரூபாவைக் கோரியிருந்தோம். ஆனால் 266 மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டு எமக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 64 விழுக்காடு ஆகும். பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியாக 23.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட 2.5 மில்லியன் ரூபாவால் அதிகமாகும்.
மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியாக ஒதுக்கப்பட்ட 266 மில்லியன் ரூபாவில் விவசாயத் திணைக்களத்துக்கு 135 மில்லியன் ரூபாவும், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்துக்கு 80 மில்லியன் ரூபாவும், நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கு 46 மில்லியன் ரூபாவும், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்துக்கு 5 மில்லியன் ரூபாவும், பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
2017இல் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள்
விவசாயத்துக்கு ஒதுக்கப்பட்ட 135 மில்லியன் ரூபாவில் பயிர்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரித்தல், அறுவடைக்கு முன்னான மற்றும் பின்னான இழப்புகளைக் குறைத்தல், சந்தை வாய்ப்புகளும் தகவல் தொடர்புவலையமைப்புகளும்,ஆளுமை விருத்தியினை மேம்படுத்தல், சுற்றாடல் பாதுகாப்பு என்றஐவகைச் செயற்பாடுகளில் 23 வேலைத்திட்டங்கள்; முன்னெடுக்கப்படவுள்ளன. இவற்றுள் உவர் நிலங்களில் நெற்செய்கையை ஊக்குவித்தல், விதைநெல் உற்பத்தி செய்தல், வயல் நிலங்களில் மறுவயற் பயிர்ச் செய்கையை ஊக்குவித்தல்,நெல் உலர்த்து மேடை அமைத்தல், வெங்காயம் மற்றும் மறுவயற் பயிர் உற்பத்திக்கான சேமிப்புக் கொட்டில்களை அமைத்தல், பழங்கள் மற்றும் மரக்கறி போன்ற உற்பத்திகளின் பெறுமதிசேர் அலகுகளை நிறுவுதல், காளான் செய்கையை ஊக்குவித்தல், அடர் மாமரச் செய்கை மற்றும் முந்திரி, அன்னாசி, கொடித்தோடை போன்ற பழங்களின் செய்கையை ஊக்குவித்தல், தேனீ வளர்ப்பை ஊக்குவித்தல், சேதனப் பயிர்ச் செய்கையை ஊக்குவித்தல், விவசாய வனமாக்கல் போன்ற வேலைத் திட்டங்கள் அடங்குகின்றன.
கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட 80 மில்லியன் ரூபாவில் சுயநுகர்வுக்கான கால்நடை உற்பத்திகளை ஊக்குவித்தல், கால்நடைகளின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரித்தல், கால்நடை மற்றும் கோழிகளின் ஆரோக்கியத்தைப் பேணுதல், திணைக்களத்தின் சேவைகளை மேம்படுத்தல், கால்நடை உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் சந்தை வாய்ப்பை அதிகரித்தல் என்ற ஐவகைச்செயற்பாடுகளில் 14 வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.இத் திட்டங்களில் சிறிய அளவிலான கோழிப்பண்ணைகள், ஆட்டுப்பண்ணைகள், மாட்டுப்பண்ணைகளை வலுவூட்டுதல், அரச இனவிருத்திப் பண்ணைகளின் உட்கட்டுமானத்தை அபிவிருத்தி செய்தல், இனவிருத்திக்கேற்ற நல்லின காளைகளை வழங்குதல், கால்நடை உணவாக பசுந்தீவனம் மற்றும் ஊறுகாய்ப் புல்லின் உற்பத்தியை ஊக்குவித்தல், பாலின் தரம் பரிசோதிக்கும் சாதனங்கள் மற்றும் சேகரிக்கும் கொள்கலன்கள் வழங்குதல் போன்றவை அடங்குகின்றன.
நீர்ப்பாசனத்துக்கு ஒதுக்கப்பட்ட 46 மில்லியன் ரூபாவில் குளவாய்க்கால்கள் மேம்படுத்தல், குளத்தலைமை வேலைகள், வான் புனரமைப்பு வேலைகள், வெள்ள அணைகள் மேம்படுத்தல், பாலம் அமைத்தல் போன்ற செயற்பாடுகளில் 11 வேலைத்திட்டங்களும் கூட்டுறவுக்கு ஒதுக்கப்பட்ட 5 மில்லியன் ரூபாவில் கூட்டுறவுத் திணைக்களங்களின் உட்கட்டுமானங்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான திறன்விருத்திப் பயிற்சி போன்ற 6 வேலைத்திட்டங்களும் முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
யூல் பவர், பீற்றா பவர் காற்று மின்னாலைகளின் நடப்பு ஆண்டுக்கான நன்கொடை நிதியில் விவசாய அமைச்சுக்கு வருமதியாக உள்ள 10 மில்லியன் ரூபாவுடன், அடுத்த ஆண்டுக்கான 20 மில்லியன் ரூபாவில் 15 மில்லியன் ரூபாவுமாக மொத்தம் 25 மில்லியன் ரூபாவை 2017ஆம் ஆண்டில் விவசாயக் கிணறுகளின் புனரமைப்புக்குப் பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.அத்தோடு,5 மில்லியன் ரூபாவையூல் பவர், பீற்றா பவர் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு முரணாகாத வகையில் பளைப் பிரதேசத்தின் அபிவிருத்திக்குப் பயன்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணசபை தோற்றம் பெறுவதற்கு முன்பாக மாகாண விவசாய அமைச்சில் இருந்தும் விவசாய அமைச்சுக்கு உட்பட்ட திணைக்களங்களில் இருந்தும் அப்போதிருந்த ஆளுநர் அவர்களால் ஆளுநர்நிதியத்துக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்த நிதி, மாகாணசபையின் பொதுக் கணக்குகள் குழுவின் முயற்சியால் மீளவும் எமது அமைச்சுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விவசாய அமைச்சுக்கு 11.45 மில்லியன் ரூபாவும், விவசாயத் திணைக்களத்துக்கு 62.135 மில்லியன் ரூபாவும், கூட்டுறவுத் திணைக்களத்துக்கு 32.00 மில்லியன் ரூபாவும் கிடைக்கப்பெறவுள்ளன. இந்நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் யாவும் வடக்கு மாகாணசபையின் தீர்மானத்துக்கு அமைவாகவும், விவசாய அமைச்சின் கொள்கைசார் நிலைப்பாட்டுக்கு அமைவாகவும்போரினால் பாதிக்கப்பட்ட எமது சமூகம் பயனுறும் விதமாக முன்னெடுக்கப்படும்.
கௌரவ மாகாணசபை உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் கூட்டுறவு அமைப்புகளின் ஊடாகவும், விவசாய அமைச்சு மற்றும் விவசாயத் திணைக்களத்தின் ஊடாகவும் நிறைவேற்றக்கூடிய வகையில் 2 மில்லியன் ரூபா மதிப்பீட்டிலான நிலைத்து நிற்கும் திட்டங்களுக்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.
பாதீடில் சுற்றுச்சூழல் சார்ந்த செயற்பாடுகளுக்கெனத் தனியாக எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை. இன்று எமது சுற்றுச் சூழலை அச்சுறுத்தும் மிகப்பெரும் பாதிப்பாக பிளாஸ்ரிக் கழிவுகளே உள்ளன. பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகள், கடதாசிப்பைகள் போன்றவற்றையும் பிளாஸ்ரிக் குவளைகளுக்குப் பதிலாக கடதாசிக் குவளைகளையும் உருவாக்கும் தொழில் முயற்சிகள் ஊக்குவிக்கப்படல் வேண்டும். கௌரவ உறுப்பினர்கள் தங்களது திட்டமுன்மொழிவுகளில் இதனையும் கருத்திற் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நீரியல் ஆய்வு மாநாடு
2017இல் நாம் மேற்கொள்ளவுள்ள இரண்டு முக்கியமான நிகழ்ச்சித் திட்டங்கள் பற்றியும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
வடமாகாணத்தின் நீர்வளம், குறிப்பாக யாழ் குடாநாட்டின் நீர்வளம் அதன் அளவிலும் தரத்திலும் வேகமாகக் கீழிறங்கி வருகிறது. இதனைக் கருத்திற் கொண்டு எமது நீர்வளத்தை மீட்புச் செய்வதற்கு வடக்கு மாகாணத்துக்கான ஒரு நீரியல் கொள்கை ஒன்றின் அவசியம் குறித்துப்பலரும் வலியுறுத்தி வருகின்றார்கள். இதன் அடிப்படையில் எமக்கான நீரியல் கொள்கை ஒன்றினை உருவாக்கும் முனைப்பில் 2017ஆம் ஆண்டு தை மாதம் 28,29,30ஆம் திகதிகளில் சர்வதேச நீரியல் ஆய்வு மாநாடு ஒன்றை யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சபையின் அனுமதியுடன், பிரதிப் பிரதம செயலாளர் (பொறியியல் சேவைகள்) அவர்களை இணைப்பாளராகக் கொண்டு பூர்வாங்க வேலைகள் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளன. இதில் பிறநாட்டில் இருந்தும் நீரியல் நிபுணர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன் ஒரு முன்னேற்பாடாகவே, விவசாய அமைச்சின் சார்பில் பிரதிப் பிரதம செயலாளர் (பொறியியல் சேவைகள்) அவர்களின் தலைமையில் நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியியலாளர்கள் இருவர், விவசாயத் திணைக்களத்தின் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் ஒருவர்மற்றும் எமது கௌரவ மாகாணசபை உறுப்பினர்கள்இருவர் அடங்கிய அறுவர் குழுவும், யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து இரு பேராசிரியர்களும் சர்வதேச நீர் ஆராய்ச்சி மையத்தின் ஏற்பாட்டில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற நிலத்தடி நீர் முகாமைத்துவம் தொடர்பான ஐந்து வார காலப் பயிற்சி நெறியில் பங்கேற்றிருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
விவசாயப் போதனாசிரியர்களுக்குத் தமிழகத்தில் பயிற்சி
விவசாய அபிவிருத்தியில் விவசாயிகளோடு நேரடியாகத் தொடர்பு கொண்டு ஆலோசனைகளை வழங்கும் பயிர் மருத்துவர்களாக விவசாயப் போதனாசிரியர்களே விளங்குகின்றனர்.அந்தவகையில் வடமாகாண விவசாயத் திணைக்களத்தில் பணியாற்றும் அனைத்து விவசாயப் போதனாசிரியர்களுக்கும் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் தரமணி வளாகத்தில் அமைந்துள்ளதேசிய வேளாண் நிறுவனத்தின் ஊடாக திறன் விருத்திப் பயிற்சிகள் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 20 பேர் அடங்கிய குழுக்களாக குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இவர்கள் பயிற்சிக்காக எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இக்குழுவில் இவர்களுக்கு மேலதிகமாக பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் ஒருவரும், முன்னோடி விவசாயிகள் இருவரும், கௌரவ மாகாணசபை உறுப்பினர்கள் இருவருமாக ஐவர் இடம்பெறுவார்கள்.
விவசாயப் போதனாசிரியர்களை பயிர் மருத்துவர்களாக வளர்த்தெடுக்கும் நோக்கில் விவசாயம் தொடர்பான மென்பொருட்கள் நிறுவப்பட்ட கையடக்கக் கணினிகள் அவர்களுக்கு எம்மால் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த டிஜிற்றல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகின் எந்த மூலையில் இருக்கும் விவசாய நிபுணர்களுடனும் இவர்கள் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெறமுடியும்.இந்த ஆண்டு 30 விவசாயப் போதனாசிரியர்களுக்கு இக் கையடக்கக் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டில் ஏனையவர்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இங்கு நான் குறிப்பிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு எமது திணைக்களங்களின் தலைவர்கள் தங்கள் திணைக்களங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கான அபிவிருத்தித் திட்டங்களை வடக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்தவல்ல நிலைத்து நிற்கும் அபிவிருத்தித் திட்டங்களாகமேற்கொள்வார்கள் என்றும், அவ்வப்போது எமது உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து அவர்களது கருத்துகளும் உள்வாங்கப்படும் என்றும் கூறி எனது உரையை நிறைவு செய்து நடப்பு 2017ஆம் ஆண்டுக்கான பாதீடை கௌரவம் மிக்க சபையினரின் முன்னால் சமர்ப்பிக்கிறேன்.