வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு இந்தியா அறிவுறுத்தல்!

விடுதலைப் போராட்டம் தோல்வியடைந்தததால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய தீர்வைப் பெறுவது கடினம் எனவும், யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு கொண்டு செயற்படுமாறும் டெல்லிக்குப் பயணம்மேற்கொண்ட வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு இந்தியா அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இக்கருத்தரங்கு தொடர்பாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கருத்துத் தெரிவிக்கையில்,

வடமாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கடந்த வாரம் புதுடெல்லியில் கருத்தரங்கொன்று நடைபெற்றது.

இக்கருத்தரங்கு புதுடெல்லியில் உள்ள ஓ.பி.ஜின்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் அரச மற்றும் பொது கொள்கை வகுப்பு கல்லூரியினால், நடத்தப்பட்ட இந்தக் கருத்தரங்கிற்கு, அவுஸ்ரேலியா நிதிப்பங்களிப்பை வழங்கியிருந்ததுடன், ஆசிய மன்றம் இதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தது.

இக்கருத்தரங்கில் 14 வடமாகாணசபை உறுப்பினர்களும், 5 அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இலங்கை விவகாரங்களுடன் தொடர்புடைய மற்றும் அதனை உன்னிப்பதாக அவதானித்து வரும் இந்தியாவின் இராஜதந்திரிகள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் பலரும் பங்கேற்று உரையாற்றியிருந்தனர்.

ஊடகவியலாளர் எம்.கே.நாராயணசாமி, முன்னாள் இந்திய வெளிவிவகாரச் செயலரும், இலங்கையில் இந்திய தூதுவராகப் பணியாற்றியவருமான நிருபமா ராவ், கலாநிதி சி.ராஜ்குமார், கலாநிதி ஆர்.சுதர்சன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.சுதர்சன நாச்சியப்பன், கலாநிதி மோகன்குமார், மேலும் பலர் இந்த வலுவூட்டல் கருத்தரங்கில் விரிவுரைகளை நிகழ்த்தியிருந்தனர்.

இனசமத்துவம், அதிகாரப் பகிர்வு, சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கம், தேசிய பாதுகாப்பு, இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் தலையீடுகள், தற்போதைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வடமாகாணசபை ஆற்ற வேண்டிய முக்கிய பணிகள் தொடர்பாக இந்தக் கருத்தரங்கில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

இக்கருத்தரங்கில், தற்கால புவிசார் சூழலில், தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்ப்பதில் இந்தியா உட்பட அனைத்துலக நாடுகளின் பங்களிப்புக்கள் இல்லையெனவும் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு செயற்படுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் இன ரீதியான போராட்டங்கள் வெற்றி பெற்றது அரிது. போராட்ட காலத்தில் தீர்வை நோக்கிச் சென்றவர்கள் வலுவான தீர்வுகளைப் பெற்றிருக்கின்றனர். ஆனால் போராட்டம் தோல்வியடைந்த நிலையில், தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகள் முழுமையாகப் பூர்த்திசெய்யப்படாது. ஆகவே நீங்கள் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு செயற்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts