Ad Widget

வடக்கு மாகாணசபையுடனும் முதலமைச்சருடனும் இணைந்து செயற்படுவேன்! – புதிய ஆளுநர்

வடக்கு மாகாணசபையுடனும் அதன் முதலமைச்சருடனும் நான் இணைந்து செயலாற்றுவேன். என வடமாகாண புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கடமையினைப் பொறுப்பேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வந்த பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களது பிரசன்னம் எனக்கு மகிழ்ச்சியை ஊட்டுகின்றது. நான் மாகாண சபை உறுப்பினராக கடமையாற்றியிருந்த போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரிடம் ஒரு கேள்வி கேட்டேன். அம்மணி நீங்கள் பலருடன் பணியாற்றியுள்ளீர்கள். பல நாடுகளுக்கும் சென்று வந்துள்ளீர்கள். இலங்கையைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? எனக் கேட்டேன்.

உலகத்திலேயே அழகான நாடு இலங்கையென அவர் எனக்கு பதில் வழங்கியிருந்தார். அவரின் பதிலினால் நான் மகிழ்ச்சியடைந்தேன். இருந்த போதும் ஏன் எமது நாடு வறிய நாடாகவே இருந்து வருகின்றது என்ற கேள்வி என்னிடம் நீண்டகாலமாகவே இருந்து வருகின்றது. ஏனெனில் நாட்டிலுள்ள அனைவரதும் வெளித்தோற்றம் சிறப்பாக அமைந்துள்ளது. எனினும் வறுமைக்கான காரணம் மக்களின் மனத்திலும் தொலைநோக்கிலுமே அமைந்துள்ளது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். எனவே நாங்கள் அபிவிருத்தி காண வேண்டுமாயின் எங்களது மனத்தில் மாற்றம் ஏற்படவேண்டும். மாறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. இந்நிலையில் வேற்றுமையில் ஒற்றுமைகாண நாம் முயலவேண்டும்.

நாங்கள் சுதந்திரத்தையும், சார்ந்திருத்தலையும் கலந்து பார்க்கவேண்டும். பொருளாதாரம், தகவல் பரிமாற்றம் போன்ற எல்லாவற்றிலும் நாடுகள் ஒன்றையொன்று சார்ந்து நிற்கின்றன. எமது சாப்பாட்டுக் கோப்பையில் இந்தியாவின் அரிசியும் மாலைதீவின் கருவாடும் காணப்படுகின்றன. இதேவேளை நாம் வைத்தியசாலையில் இரத்தத்தை ஏற்றும் போது சாதி, மதம் பார்ப்பதில்லை. தனித்தூய்மை என்பது கட்டுக்கதையாகும். எனவே கலப்புத்தன்மையே சிறந்த பெறுபேறுகளைத் தருகின்றது. கலப்புப்பிள்ளைகள் சிறப்பாக வளருகின்றனர்.

தற்போது சிலர் சிங்கலே என்று கோஷமிடுகின்றனர். அவ்வாறு கோஷமிடும் சிங்க லேயிலும் கூட கலப்புத் தன்மையுள்ளது. இந்திய அரசர்கள் இலங்கையில் பெண்ணெடுத்தனர். பல முஸ்லிம்கள் சிங்களவர்களை மணந்துள்ளனர். நான் மாகாண சபையில் இருந்த போது அபிவிருத்தி வேலையில் தமிழ் ஒப்பந்தக்காரரும் வேலையாட்களுமே ஈடுபடுத்தப்பட்டனர். எனவே இதேபோன்று தற்போதும் சகல அபிவிருத்தி வேலைகளிலும் தமிழ் மக்கள் ஈடுபடுத்தப்படல் வேண்டும். சகல சமயங்களின் குறிக்கோளும் ஒன்றே என ரவீந்திரநாத் தாகூர் கூறியிருந்தார். அத்தகைய சமயங்கள் எம்மை வழி நடத்துகின்றன. என்னுடைய தந்தையார் ஒரு கிறிஸ்தவர். தாய் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள். ஆனால் எமது குடும்பத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டிருக்கவில்லை.

நான் மார்க்சியவாதியாக இருந்த போது மூன்றரை வருடங்கள் சிறையில் கழித்தேன். நான் 13வது திருத்தத்திற்கு ஆதரவளித்திருந்தேன். மூன்று முறை சுடப்பட்ட போதும் தப்பியிருந்தேன். நான் முதலமைச்சருடனும் மாகாண சபையுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவேன். நாங்கள் மக்களைச் மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் கவனம் செலுத்துவோம். அண்மையில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நாக விகாரையில் வழிபட்டது நல்ல சமிக்ஞையாகும். மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா, கொடிக்குத் தாய் பாரமா என்ற பாடல் போன்று இலங்கைத் தாய்க்கு நாங்கள் பாரமில்லை என வாழ்ந்து காட்டவேண்டும் என்றார்.

Related Posts