வடக்கு மாகாணசபையின் மூலம் வழங்கப்படும் நியமனங்களில் எமக்குத் தெரிந்தவர், எமக்கு வாக்களித்தவர் என்று எந்த முன்னுரிமைகளும் வழங்கப்படுவதில்லை. பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. நீதியரசர் ஒருவரை முதல்வராகக்கொண்டு இயக்கப்படும் மாகாண நிர்வாகத்தில் நியமனங்கள் யாவும் நீதியான முறையில் தகுதிகளின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபையால் முகாமைத்துவ உதவியாளர்கள், சாரதிகள், அலுவலகப் பணியாளர்கள் ஆகிய பணிகளுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 160 பேருக்கு நேற்று திங்கட்கிழமை (18.04.2016) நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நியமனக் கடிதங்களை வழங்கிவைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
எங்களிடம் தினமும் ஏராளமானோர் வேலை தேடி வருகிறார்கள். சுயமாகத் தொழில்முனைவோராக மாற எவருக்கும் விருப்பமில்லை. எல்லோரும் அரச பணிகளில் நியமனம் பெறவே விரும்புகிறார்கள். எங்களுக்கு வாக்களித்ததாகக் கூறி வேலை தருமாறு கேட்கிறார்கள். மத்திய அமைச்சர்கள் சிலரின் பெயர்களைக்கூறி நூற்றுக்கணக்கில் அவர்களது ஆதரவாளர்களுக்கு அவர்கள் வேலை பெற்றுக்கொடுக்கிறார்கள், உங்களால் ஏன் முடியவில்லை என்று கேட்கிறார்கள்.
மாகாணசபைக்கு உட்பட்ட திணைக்களங்களுக்கு மாத்திரமே மாகாணசபையால் நியமனங்களை வழங்க முடியும். அதுவும் பரீட்சைகள் நடாத்தி, நேர்முகத்தேர்வுகள் வைத்து தகுதியின் அடிப்படையிலேயே மாகாணசபை நியமனங்களை வழங்குகிறது. முறையற்ற விதத்தில் எவ்வகையான நியமனங்களையும் யாரும் வழங்கிவிட முடியாது என்பதை எங்களிடம் வேலை கேட்டு வருபவர்களுக்கு நாங்கள் விளக்கி வருகிறோம்.
இங்கு நியமனம் பெற்ற எல்லோரும் தகுதி அடிப்படையிலேயே, எவரது பரிந்துரைகளும் இல்லாமலேயே நியமனங்களைப் பெற்றுள்ளீர்கள் அந்த வகையில் நீங்கள் மகிழ்ச்சி அடையலாம். எங்களுக்கும், மாகாண நிர்வாக இயந்திரத்தை நகர்த்துவதற்குப் புதிய ஆளணி கிடைத்திருக்கிறது என்ற மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சி என்றும் நீடிக்கும் வகையில் உங்கள் கடமைகளை நீங்கள் செவ்வனே செய்ய வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட வடக்கை மேம்படுத்த உழைப்பதன் மூலம் நீங்களும் உயர்வடைவீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் வடமாகாணசபையின் அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம், வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) திருமதி ச.மோகநாதன் மற்றும் அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.