யாழ்.வலிகாமம் வடக்கு மக்களின் காணிகளை 6 மாதங்களில் மக்களிடம் வழங்குவேன் எனக்கூறிய ஜனாதிபதி, வடக்கு மக்கள் தேவைக்கு அதிகமாகவே காணிகளை கேட்கிறார்கள் என கூறுவது வருத்தமளிக்கிறது என வலி வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் சண்முகலிங்கம் சஜீவன் தெரிவித்துள்ளார்.
வலி, வடக்கு மீள்குடியேற்ற நிலை தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,
”ஆட்சி மாற்றத்தின் பின் யாழ்.வந்த ஜனாதிபதி வலி வடக்கு மக்களை சந்தித்ததுடன், வலி வடக்கு மக்களின் முகாம்களுக்கும் சென்றிருந்தார். இதன்போது அவர் 6 மாதங்களுக்குள் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என கூறியிருந்தார்.
அதேவேளை பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என கூறினார். மேலும் மக்களின் காணி விடுவிப்பு போராட்டங்களிலும் கலந்து கொண்டார்.
இன்று அவர்களே வடக்கில் காணி பிணக்குகள் இல்லை என்ற தோரணையிலும், கிழக்கு மக்கள் காணிக்காகப் போராட்டம் நடத்தவில்லை, வடக்கு மக்கள் தேவைக்கு அதிகமாகவே காணிகளை கேட்கிறார்கள் எனவும் கூறுவது வருத்தமளிக்கிறது. ஜனாதிப தி மற்றும் பிரதமரின் கருத்துக்களை நம்பியிருந்த மக்களுக்கு ஜனாதிபதியின் கருத்துக்கள் வருத்தமளிக்கிறது
எனவே ஜனாதிபதி, பிரதமர் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தால் அடுத்த தடவை ஜனாதிபதி, பிரதமர் யாழ்.வரும்போது கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்போம்” என்றார்