வடக்கு மக்கள் உரிமைகளை அனுபவிக்கக் கூடாது என்பதே அரசின் திட்டம் : சுமந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு

sumanthiranவட மாகாண மக்களுக்கு மாத்திரம் மாகாண சபை அதிகாரங்களையும் உரிமைகளையும் அனுபவிக்க விடக் கூடாது என்பதற்காகவே அரசாங்கம் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

13ஆவது திருத்தச்சட்டம் இந்தியாவினால் பலவந்தமாக திணிக்கப்பட்டதொன்றல்ல. அப்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து தரப்பினர்களுடனான உள்ளக பேச்சுவார்த்தையின் வெளிப்பாடே இந்த மாகாண சபை முறைமையும் 13ஆவது திருத்தச்சட்டமும் ஆகும். ஆனால் அரசாங்கம் இதனை திரிபுபடுத்தி பிரசாரம் செய்கிறது

சர்வதேச சமூகத்திடமும் ஐக்கிய நாடுகள் சபையிடமும் இந்தியாவிடமும் 13ஆம் திருத்தத்திற்கு மேலாக சென்று அதிகார பரவலாக்கம் செய்வதாக வாக்குறுதி அளித்த அரசாங்கம் இன்று அதற்கு எதிராக செயற்பட முனைகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் எதிர்க்கட்சிகள் உள்ளடக்கப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் என்பனவும் இல்லை. இந்நிலையில் அரசாங்கம் யாரிடம் கலந்தாலோசிக்க உள்ளதென்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஆளும் கட்சி தங்களுக்குள்ளே கலந்தாலோசித்து 13ஆம் திருத்தம் தொடர்பிலான முடிவுகளை எடுப்பதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அவசியமற்ற ஒன்றாகும். அரசாங்கம் 13ஆம் திருத்தத்தின் வீரியத்தை குறைப்பதற்கு எடுத்து வருகின்ற நடவடிக்கைகளுக்கு எதிராக நாட்டில் மக்கள் பல பகுதிகளிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அரசாங்க கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் என்போர் இது தொடர்பில் குரல் எழுப்பியுள்ளமை வரவேற்கத் தக்கதாகும். அரசாங்கத்தின் இப் பிற்போக்குத்தனத்தினை சுட்டிக்காட்டி திருத்த வேண்டியது அவசியமாகும். ஆதலால் அனைவரும் இது தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 25 வருடமாக ஏனைய மாகாணங்களில் மக்கள் அனுபவித்த மாகாண சபை முறைமையை தமிழ் மக்கள் அதிகமாக வாழும் வடக்கில் மாத்திரம் வேண்டாம். இல்லாது செய்ய வேண்டும். தேவையற்றது என அரசாங்கம் கூறுவது தமிழ் மக்களின் உரிமைகளை கேள்வி குறியாக்குவதோடு அரசாங்கத்தின் பிற்போக்கான சிந்தனையை வெளிப்படுத்துவதாக உள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தமிழர்கள் எவ்வாறு கௌரவமான அரசியல் தீர்வு ஒன்றை தற்போதைய இலங்கை அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Posts