வடக்கு மக்கள் அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் எச்சரிக்கை!

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் பிரவேசிப்பவர்கள் தொடர்பாக வடக்கு மக்கள் அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பரவல் நிலைமை தொடர்பாக யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிடுகையில். “யாழ். மாவட்டத்தில் கொரோனா நிலைமை சற்று அதிகரித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதத்திற்குப் பின்னர் ஆயிரத்து 643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை 19 இறப்புக்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், யாழ். மாவட்டத்தில் 968 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 995 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில், தேசிய மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் இடர் நிலைமை காணப்படுவதால் மக்கள் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி நடக்கவேண்டும்.

இதேவேளை, தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், அங்கிருந்து மக்கள் கடல் வழியாக சட்டவிரோதமாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் நிலை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஆழ்கடல் மீனவர்களுக்கும் மீன்பிடி சமூகத்தினருக்கும் கரையோரப் பகுதியில் மக்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதுடன் கண்காணிப்பு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர்த்து எமது மாவட்டத்தினை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க உதவ வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Posts