“ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி உறுதியாகிவிட்டது. நாட்டுக்கு விடிவு காலம் நெருங்கிவிட்டது. எனவே, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் அணிதிரளவேண்டும்” என்று மஹிந்த அரசிலிருந்து எதிரணியில் இணைந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
“தெற்கில் பேசப்படும் அளவுக்கு வடக்கில் சுதந்திரம் இல்லை. வடக்கு மக்களின் நிலைமை மிகவும் அபாயகரமானதாக உள்ளது. எனவே, அவர்களுக்கும், முழு நாட்டு மக்களுக்கும் சம உரிமையைப் பெற்றுக்கொடுத்து, அனைவரும் சமமாக வாழக்கூடிய சமூகமொன்றைக் கட்டியெழுப்புவோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய வைத்தியர்கள் சங்கத்துடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“ஜனவரி 8 ஆம் திகதி உருவாக்கப்படும் தேசிய அரசு இரண்டு வருடங்களுக்கு செயற்படும். இந்த தேசிய அரசில் பங்கேற்று நாட்டு மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும். நாடாளுமன்றமும், அமைச்சரவையும் இன்று வெறும் இறப்பர் முத்திரைகளாகவே உள்ளன. இதை உதாரணமாகக் கொண்டு ஹிட்லர், முசோலினிக்கு இடையிலான வித்தியாசம் என்ன என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்” – என்று அவர் மேலும் தெரிவித்தார்.