வெளிநாடுகளில் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள அதிநவீன சத்திரசிகிச்சை கூடத்திற்கு யாழ்ப்பாணத்திலுள்ள சில வைத்திய நிபுணர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இதனால் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்திற்கு கிடைக்கவுள்ள மிகச் சிறந்த வைத்திய கூடம் திரும்பிச்செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படுமாக இருந்தால், தனியார் வைத்தியசாலைகளின் வருமானம் இழக்கப்படும் என்று கருதியே யாழ்ப்பாணத்தின் சிரேஸ்ட வைத்திய நிபுணர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இந்த வைத்தியசாலை அமைக்கப்படவேண்டும் என்பதில் யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவபீடமும் உறுதியாக இருப்பதாக தெரியவருகின்றது. இதனால், வைத்தியசாலையை எதிர்க்கும் வைத்திய நிபுணர்கள் இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்திருக்கின்றனர்.
அந்த வைத்தியசாலை அமைப்பதற்கு யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடம் முயற்சிகளை மேற்கொள்ளுமாயின், யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களுக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் பயிற்சிகளை வழங்கமாட்டோம் என்றும் எதிர்ப்பு வைத்தியர் குழாம் துணைவேந்தரை அந்தக் கடிதத்தில் எச்சரித்திருக்கின்றது.
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அருகில் – யாழ்.மாநகர சபையினால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட காணியில் – வெளிநாடுகளில் நிதி உதவிடன் உயர் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் இந்த நவீன வைத்தியசாலையை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த வைத்திய சிகிச்சைக் கட்டிடம் அமையப்பெறுமாயின் வடக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் தங்கள் பாரிய நோய்களுக்கு ஒரேநாளில் சத்திரசிகிச்சைகளை (Day care Surgery) செய்துகொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
இந்த வைத்தியசாலைப் பிரிவு அமைந்தால், மக்கள் தனியார் வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்வதற்கு நிகரான நவீன வைத்திய சேவைகளை இங்கு பெற முடியும்.
ஆனால், யாழ்ப்பாணத்தில் உள்ள சிரேஸ்ட சத்திரசிகிச்சை நிபுணர்கள் சிலர் இணைந்து இந்த வைத்தியசாலைக்கு எதிராக குரல்கொடுத்து வருகின்றமை யாழ்.மக்களுக்கு கிடைக்கவிருக்கின்ற பெரும் வரப்பிரசாதத்தை இல்லாமல் செய்யும் முயற்சி என்று சில நேர்மையான வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களின் வரிப்பணத்தில் கல்விகற்று மக்கள் விரோத செயலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொள்கின்றார்கள்.
மேற்படி விடயம் தொடர்பில் மருத்துவ மாணவர்கள் சிலரிடம் வினவிய போது அவர்கள் இவ்விடயம் தொடர்பில் தாம் கருத்து எதையும் தெரிவிக்க விரும்பவில்லை என்றனர். காலம் காலமாக சிலர் தங்களின் தனிப்பட்ட நலனுக்காக மருத்துவ மாணவர்களின் கல்வியை பகடைக் காய்களாக்கிக் கொள்வதே வழமையாகும் எனவும் அவர்கள் கூறினார்கள்.
இந்த விடயம் தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்க பிரதிநிதிகள் சிலரைத் தொடர்புகொண்டு கேட்டபோது,
யாழ்ப்பாண மருத்துவர்கள் சிலரினால் யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கின்றது என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர். ஆனால், அந்தக் கடிதத்திற்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர்கள் கூறினர்.
இது ஒருசிலரின் வற்புறுத்தலினால் இந்தக் கடிதத்தில் சிலர் ஒப்பமிட்டிருக்கின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இந்த சத்திரசிகிச்சைச் கட்டடத் தொகுதி தொடர்பில் பக்கசார்ப்பு அற்ற முறையில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க தாம் ஒரு குழுவை நியமித்து உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.