இரண்டாயிரம் இராணுவத்தினரைப் பயன்படுத்தி வடக்கு மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிக்க அரசு தீவிரமாக முயற்சித்து வருகின்றது என பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன.
கொழும்பு 7 இல் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை அவர் சுமத்தினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர் தெரிவித்த விடயங்கள் வருமாறு:
“அரசிலிருந்த மிக முக்கியமான ஒருவரும், பிரதியமைச்சருமான பைஸர் முஸ்தபா இன்று (நேற்று) எம்முடன் கைக்கோர்த்துள்ளார்.
அரசிலிருந்து 7 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளியேற்றத்துடன் ஆரம்பமான பொது எதிரணியின் இந்த வெற்றிப் பயணம் தற்போது 25 நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்துத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எதிர்வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை இன்னும் உயரும். 1978 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்வருடமே அரசிலிருந்து அதிகமான அமைச்சர்கள் வெளியேறி இருக்கின்றனர்.
அத்தோடு, 25 எம்.பிக்கள் வெளியேறி பொது எதிரணியில் இணைந்தமை இலங்கை வரலாற்றில் இதுவே முதன் முறையாகும்.
இதேநேரம், வடக்கின் சில கிராமங்களுக்கு இரண்டாயிரம் சீருடையில்லாத இராணுவத்தினரை அரசு அனுப்பி வைத்திருக்கிறது. இவர்கள் மூலமாக மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிக்க அரசு தீவிரமாக முயல்கிறது. இந்தத் தகவலை எம்மிடம் வழங்கிய இராணுவப் பிரதானியொருவர், அரசின் இத்திட்டத்தை முறியடிப்பதாக எம்மிடம் உறுதியளித்தார்.
அத்தோடு, தற்போது நடைபெற்று முடிந்துள்ள தபால் மூல வாக்குப்பதிவில்கூட அதிகமான இராணுவத்தினர் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாகவே வாக்களித்தனர் எனவும் அவர் உறுதிப்படுத்தினார்.
சாதாரண மக்கள் மட்டுமின்றி இராணுவத்தினர்கூட அரசின் மீது அதிருப்தியாகவே இருக்கின்றனர். ஆகவே, இம்முறை எமது வெற்றி உறுதியாகிவிட்டது. இதைத்தடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் ஒருபோதும் முடியாது” – என்றார்.