வடக்கு மக்களின் வாக்களிப்பு வீதத்தை குறைப்பதற்கு முயற்சி! – தி.துவரகேஸ்வரன்

thuvareswara-makesswaran-UNPவடக்கு தேர்தலில் வன்முறைகள் மூலம் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி மக்களை அச்சத்திற்குட்படுத்தி மக்களின் வாக்களிப்பு வீதத்தை குறைக்கும் முயற்சி நடைபெறுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளரான தி.துவரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண சபை தேர்தல் நீதியாகவும் கௌரவமாகவும் நடைபெற வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம். எமது கட்சி இதுவரை எந்த தேர்தல் வன்முறைகளிலும் ஈடுபடவில்லை மக்களுக்கு இடையுறும் ஏற்படுத்த வில்லை.

ஆனால் சிலர் திட்டமிட்டு தேர்தல் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். இதனால் மக்களுக்கு பயத்தினை ஏற்படுத்த்தி வாக்களிப்பு வீதத்தை குறைப்பதன் மூலம் தாங்கள் சொற்ப வாக்குகளில் வெற்றி பெற நினைக்கின்றனர்.

நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடப்பேன் என்று சத்தியப்பிரமாணம் செய்து அமைச்சர் ஆனவர் இன்று எந்த கட்சியும் நெடுந்தீவுக்கு செல்ல முடியாத படி வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளார்.

அந்த மக்களை ஏனைய அரசியல் கட்சியுடன் தொடர்பு படாத வகையில் துண்டித்து வைத்துள்ளார்.

அதே போல் இன்னும் ஒரு ஆளும் கட்சி வேட்பாளர் கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது யாழ் மாநகர சபை முதல்வர் தலையிலே கைத்துப்பாக்கி வைத்தவர்கள் இந்த தேர்தலில் ஒரு வேட்பாளரை துப்பாக்கி காட்டி மிரட்டியுள்ளார்கள்.

எனவே மக்கள் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களான நடராஜா ரவிராஜ், தியாகராஜா மகேஸ்வரன் போன்றவர்களை தெரிவு செய்ய வேண்டும் இந்த தேர்தலில் தெரிவு செய்யப்படுகின்றவர்களின் பின்னால் ஆயுத குழுக்களோ ஒட்டுக்குழுக்களோ இருக்க கூடாது.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்காமல் தமிழ் மக்கள் தடுக்கப்பட்டதனாலையே இந்த 8 ஆண்டுகளும் தமிழ் மக்கள் பாரிய சொத்து, பொருள் சேதங்களையும் மற்றும் உயிர் சேதங்களையும் பெற்றனர். அதேபோன்றதொரு வரலாற்று தவறினை மக்கள் இனியும் செய்ய மாட்டார்கள் என தான் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts