வடக்கு பாடசாலைகளுக்கு 5ஆம் திகதியே விடுமுறை!

வடமாகாண பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் 5ஆம் திகதியே மூடப்படும் என வடமாகாண கல்வி, விளையாட்டு பண்பாட்டலுவல்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ஆர்.இரவீந்திரன் தெரிவித்தார்.

கடந்த 26ஆம் திகதி, கோண்டாவில் ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள ரயில் கடவையில் ரயிலுக்கு முன்பாக பாய்ந்து கொக்குவில் இந்துக் கல்லூரி உயர்தர வகுப்பு மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரன் உயிரிழந்திருந்தார். சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியே மாணவன் தற்கொலை செய்துகொண்டான்.

இதனால், அந்த மாணவனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடந்த 27ஆம் திகதி வடமாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

அன்றைய தினம் விடப்பட்ட விடுமுறைக்கான பதில் பாடசாலையானது எதிர்வரும் 5ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

இதனால் அன்றையே தினமே வடமாகாண பாடசாலைகள், மூன்றாம் தவணை விடுமுறைக்காக மூடப்படவுள்ளன. நாட்டிலுள்ள ஏனைய பாடசாலைகள், மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 4ஆம் திகதி மூடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts