வடக்கு தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த தெற்கின் எதிர்ப்புக்கு கூட்டமைப்பு பூரண விளக்கம் (முழு வடிவம்)

tnaதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் தெற்கில் பலதரப்பட்ட கருத்துக்கள், குற்றச்சாட்டுக்கள், ஆதரவுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமது தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான விளக்கத்தை அளித்துள்ளது.

அதன் முழு வடிவம் பின்வறுமாறு:-

அரசாங்கமும் அதன் கடும் போக்கு பங்காளிக் கட்சிகள் பலவும் 2013 செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட த.தே.கூ இன் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியதால், த.தே.கூ தேர்தல் பிரசாரத்தில் கடந்த வாரம் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இது, த.தே.கூ இன் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவை அரசாங்கம் நிராகரித்ததிலிருந்து தொடங்கிய ஒரு புதிய போக்காகும். ஏனைய அரசியல் கட்சிகளின் தெரிவுகளையும் தீர்மானங்களையும் அங்கீகரிப்பதற்கான அல்லது நிராகரிப்பதற்கான உரிமையை அரசாங்கம் தனதாக்கிக் கொண்டிருப்பது வேடிக்கையானதொன்றாகும்.

உண்மையில், நாட்டிலுள்ள ஏனைய கட்சிகளுக்கு வழங்கப்பட்டடிருக்கும் உரிமை கூட த.தே.கூ விற்கு இல்லாதிருப்பது போலவே தோன்றுகிறது. அரசாங்கம் தமது சொந்த கட்சியினூடாக தமிழ் பேசும் மக்களின் மீது குற்றப் பின்னணியுடைய தீய சக்திகளை வலிந்து திணிக்க முயலுவது மட்டுமின்றி, வட மாகாணத் தேர்தலுக்கு த.தே.கூ கன்னியமான, நேர்மையான, கற்றறிந்த வேட்பாளர்களை நியமிக்கும் அதன் (த.தே.கூ இன்) சிறப்புரிமையை பறிக்கவும் முனைகின்றது.

தன்னை உயர்வான நிலையிலும் மற்றவர்களை தாழ்வான நிலையிலும் வைத்துப் பார்க்கும் இந்த மன நிலைதான் தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்டிருக்கும் தேர்தல் அறிக்கைமீது அவர்களைக் கருத்து தெரிவிக்கவும் வைத்திருக்கிறது. தமிழ் மக்களின் நம்பத்தகுந்த பிரதிநிதிகளான த.தே.கூ வினால் இவ்விறிக்கை வெளியிடப்பட்டது என்பதே, அவ்வறிக்கை அரசாங்கத்தின் அல்லது அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளவர்களின் அனுமதியைப் பெற வேண்டுமென்ற தேவை யொன்றும் கிடையாது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

தமிழ் மக்களை எண்ணிக்கையில் கூடுதலாக இருக்கும் ஒரு பெரும்பான்மை இனத்திற்கு அடிமையாக வைத்திருப்பதற்கு கங்கணம் கட்டியிருக்கும் ஓர் அரசாங்கத்தை இந்த யதார்த்தம் எவ்வளவு தூரம் நெருடுவதாகவிருப்பினும், த.தேகூ அரசாங்கத்திடமிருந்து ஆணை பெற்று அதன்படி நடக்க விரும்பும் கூட்டரசாங்கத்தின் ஒரு சிறிய பங்காளிக் கட்சியல்ல. எமது தேர்தல் அறிக்கைமீது கலங்கம் ஏற்படுத்தும் அவர்களது வெறியில், அரசியலமைப்பை மீறிவிட்டதாக த.தே.கூ ஐ அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதை விட உண்மைக்குப் புறம்பானதொன்று இருக்க முடியாது.

இந்த அறிக்கையின் உள்ளடக்கங்கள் ஒன்றும் புதியவையல்ல. தமிழ் மக்கள் த.தே.கூ விற்கு தெளிவானதொரு மக்களாணையை வழங்கிய 2010 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையின் அரசியல் நிலைப்பாடுகளையே அது உள்ளடக்யிருக்கியிருக்கிறது. இந் நிலைப்பாடுகள் இ.த.க இனால் 60 வருடங்களுக்கு மேலாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன. உண்மையில், தமிழ் மக்களிடமிருந்து தோன்றி இ.த.க.யினால் முன்வைக்கப்பட்ட சமஸ்டி அரசாங்கக் கட்டமைப்பிற்கான ஒரு கோரிக்கை 1950களில் தான் தோன்றியது.

அதற்கு கால் நூற்றாண்டிற்கு முன்னரே 1926 இல் எஸ்.டப்ளியூ.ஆர்.டீ பண்டாராநாயக்க யாழ்ப்பாணத்தில் தொடர் விரிவுரைகளை ஆற்றி, ´சிலோன் மோனிங் லீடர்´ பத்திரிகைக்கு ஆறு கடிதங்களை எழுதியபோதே அது அவரால் இலங்கைக்கான மிகச் சிறந்த அரச முறைமையாக விளக்கப்பட்டிருந்தது. இம்பீறியல் ஆணைக்குழுவிற்கு கண்டிய லீக் சமஸ்டி ஆட்சி முறையொன்றைப் பரிந்துரை செய்தபோது, இதே கருத்தைத்தான் அது வலியுறுத்தியது.

மிக அண்மைக் காலத்தில் 2002 டிசெம்பர் 05ஆம் திகதி ஒஸ்லோவில் தற்போதைய வெளி நாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தலைமையிலான இலங்கை அரசாங்கத் தூதுக் குழு, ´ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளில் உள்ளக சுய நிர்ணய உரிமை என்ற கோட்பாட்டின் அடிப்படையில், சமஸ்டி கட்டமைப்பின் அடிப்படையிலானதொரு தீர்வை ஆராய்ந்தறிவதற்கு இணங்கியது.´

2013 ஆண்டு வமாச தேர்தல் அறிக்கையில், மேற்கோள் காட்டப்பட்ட த.தே.கூ வின் 2010 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையானது, பல வருடங்களுக்கு முன்னர் பண்டாரநாயக்கவும் கண்டிய லீக்கும் வலியுறுத்தியவற்றுக்கு அல்லது இலங்கை அரசாங்கத்தின் சார்பில் போராசிரியர் ஜீ.எல் பீரிஸ் இணங்கியதற்கு அப்பால் ஒரு அங்குலமும் செல்லவில்லை.

´வேடிக்கையானது´ என்று நான் குறைவாகக் குறிப்பிட்டது – உண்மையில் ´அதிர்ச்சியளிப்பது´ என்பதே அதைவிட பொருத்தமான சொல்லாக இருக்கக்கூடும் – எஸ்.டப்ளியூ.ஆர்.டீ பண்டாரநாயக்கவும் ஜீ.எல் பீரிசும் முன்னர் எந்தத் தீர்வில் பற்றுறுதி கொண்டிருந்தார்களோ, 1993ஆம் ஆண்டிற்கும் 2008ஆம் ஆண்டிற்கும் இடையில் இலங்கை அரசாங்கத்தின் தீவாலோசனைகள் பலவற்றுள் எந்தத் தீர்வு உள்ளடக்கப்பட்டிருந்ததோ, அதே தீர்வை த.தே.கூ வலியுறுத்தும்போது, அந்த நிலைப்பாடு ´தீவிரவாதம்´, ´இனவாதம்´ அல்லது ´பிரிவினைவாதம்´ ஆகிவிடுகிறது. இது, சிங்கள மக்களுக்கும் அவர்களது பிரதிநிதிகளுக்கும் ஒப்பான சம உரிமை தமிழ் மக்களுக்கு அல்லது அவர்களது அரசியல் பிரதிநிதிகளுக்கு இல்லை என்பதற்கான மேலுமொரு சான்றாகும்.

தமிழ் மக்கள் இரண்டாம் தர மக்களாகக் கருதப்படுவதாகத் தோன்றுகிறது. சமஸ்டி முறைக்கான தேவை தொடர்பாபன த.தே.கூ இன் நிலைப்பாடு ஒரு விதப் பிரிவினைவாதமாகும் என்பது ஒரு பச்சைப் பொய்யாகும். ´ஐக்கிய இலங்கைக்குள் நாட்டின் தமிழ் பேசும் வடக்குக் கிழக்கில் தன்னாட்சியை உறுதிப்படுத்த நாம் செய்யக் கூடிய மிகச் சிறந்தது என்ன என்பதை தீர்மானிக்கும் எமது தெரிவை பிரயோகிப்பதற்கான எமது உரிமை´ யை எமது தேர்தல் அறிக்கை குறிப்பிடும்போது, அதன் மூலம் நாங்கள் கருதுவது அதுதான்.

எனினும் இந்த அரசாங்கத்தினதும் அதற்கு வக்காளத்து வாங்குபவர்களினதும் பார்வையில் ஐக்கிய என்பது பிரிவினையாகும். மக்களின் செயல் சிந்தனைகளையும் கட்டுப்படுத்த முயலும் ஓவெளியன் ஆட்சியின் உண்மையற்ற கற்பனை கருத்துக்கான ஒப்புவமையயொன்று முன்னரும் காட்டப்பட்டது.

இது ஒன்றும் புதுமையானதல்ல. ஏனெனில், இந்த அரசாங்கத்திற்கு யுத்தம் என்பது உண்மையில் சமாதானமாகும், சுதந்திரம் என்பது அடிமைத்தனமாகும். அறியாமை என்பது பலமாகும். எனவே, நல்லிணக்கம் ஏற்படுவதற்கு, ஏனையவர்கள் பற்றிய விசமத்தனமான பொய்கள் – முஸ்லிம்களுக்குச் சொந்தமான புடைவைக் கடைகளில் மலட்டுத் தன்மையை ஏற்புடுத்தும் இனிப்புகள் வழங்கப்படுவது என்பதாக இருந்தாலென்ன, அல்லது தமிழ் சமஸ்டிவாதிகள் பிரிவினைவாதிகள் என்பதாக இருந்தாலென்ன – ஆரம்பத்திலேயே கடுமையாகக் கண்டிக்கப்படுவது மிகவும் முக்கியமாகும். இத்தகைய வெறுப்புணர்வைப் பரப்புபவர்களுக்கு பல்லின சமூகமொன்றில் இடமில்லை.

த.தே.கூ இனால் மேற்கொள்ளப்பட்டுள்ள விஷேட நிலைப்பாடுகளை பரிசீலிக்கின்றபோது, இலங்கை அரசினால் முன்வைக்கப்பட்ட தீர்வாலோசனை மற்றும் வாக்குறுதிகள் ஆகியவற்றையும் பரிசீலிப்பது பொருத்தமானதாகும். 13 வது திருத்தத்திலிருந்து முன்னே சென்று அதை மேலும் முன்னேற்றுவதற்கான 1992 ஆம் ஆண்டு பாராளுமன்ற தெரிவுக் குழுவின் தீர்வாலோசனைகள் (மங்கள முனசிங்க தீர்வாலோசனைகள் என்றும் அழைக்கப்பட்டது) ஒருங்கியை நிரலை நீக்குவதற்கு அல்லது அதிலுள்ள அதிகாரங்களை மாகாண நிரலுக்கு மாற்றி அதனை (ஒருங்கியை நிரலை) அளவில் சிறியதாக்குவதற்கு பரிந்துரை செய்தது.

மாகாணங்களின் இணைப்பிற்கான ஏற்பாடுகள் இருக்கக்கூடாது என்று அது கூறினாலும், வடக்குக் கிழக்கிற்கு மட்டும் ஒரு விஷேட அம்சமாக மேல் சபை ஒன்றை பரிந்துரைத்தது. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் 1995ஆம், 1997ஆம் ஆண்டுகளினதும் 2000 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தினதும் தீர்வாலோசனைகள் ஒற்றை ஆட்சி முறையை கைவிட்டது. அரசை சமஸ்டி அரசு என்று அது வெளிப்படையாக விபரிக்காவிட்டாலும், அம்சத்தில் அது சமஸ்டி தன்மை கொண்டதாகவே அமைந்திருந்தது.

ஒருங்கிய நிரல் இருக்கவில்லை என்பதோடு, வடக்குக் கிழக்கு இணைப்பானது, தமிழ் முஸ்லிம் கட்சிகளுடன் கலந்தோலோசித்து தீர்மானிக்கப்டுமென கூறப்பட்டது. அரசாங்கத்தின் இம்மூன்று தீர்வாலோசனைகளும் முன்வைக்கப்பட்டு புதிய அரசியலமைப்புச் சட்டமூலம் அமைச்சரவை அங்கீகாரத்தோடு ஓர் அரசாங்க சட்டமூலமாக பாராளுமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டபோது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஓர் அமைச்சரவை உறுப்பினராகவிருந்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே, சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவையும் வல்லுநர்கள் குழுவொன்றையும் நியமித்து 2006 ஜூலை மாதம் அவை இரண்டிலும் உரையாற்றினார். அவர் கூறியது இதுதான்:

´பண்டாரநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தம் தொடங்கி கடந்த கால முயற்சிகளை நாம் ஆராய வேண்டும். ஏனைய நாடுகளின் அனுபவங்களிலிருந்து பொருத்தமான படிப்பினைகளை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். நான் நாட்டின்மீது ஒரு தீர்வை திணிக்க மாட்டேன். எனினும் நீங்கள் உங்கள் கலந்தாய்வுகளின் மூலம் தேசியப் பிரச்சனைக்கு ஒரு தீர்வை வழங்குவீர்கள். ´மக்கள் தமது சொந்த இடங்களில் தமது தலை விதியை தாமே பொறுப்பேற்று தமது அரசியல் பொருளாதார சூழ்நிலைகளை தாமே கட்டுப்படுத்த வேண்டும்.

வழங்களை சமமற்ற முறையில் ஒதுக்கீடு செய்யும் மத்திய தீர்மானம் மேற்கொள்ளானது, கணிசமானளவு காலம் ஒரு பிரச்னையாகவே இருந்து வருகிறது. மேலும், அதிகாரப் பரவலாக்கமானது, மத்தியில் அளவுக்கதிகம் தங்கியிராது, தனித்துவம், பாதுகாப்பு மற்றும் சமூகப் பொருளாதார அபிவிருத்தி ஆகியவை தொடர்பான பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கவேண்டும். இது தொடர்காக, பிராந்திய சிறுபான்மையினர் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதும் முக்கியமாகும்.

´சுருங்கக் கூறின், எந்தவொரு தீர்வும் மக்கள் தமது தலைவிதியை தாமே பொறுப்பேற்குமுகமாக அவர்களுக்கு அதிகாரத்தை பகிர்வதை ஓர் அவசர விடயமாகக் கொண்டு பகிர வேண்டும். இது உலகின் பல பாகங்களில் முயன்று பார்க்கப்பட்டுள்ளது. நாம் உண்மையான ஒரு இலங்கை அரசியலமைப்பை உருவாக்கும்போது, எமது அயல்நாடாகிய இந்தியா அடங்கலாக உலகெங்கும் நாம் ஆராயக் கூடிய பல உதாரணங்கள் உள்ளன.

´முரண்பாட்டின் பின்னணியைக் கொண்டு பார்க்கையில், எந்தவொரு தீர்வும் நாட்டின் இறைமையை தியாகம் செய்யாது முடிந்தவரை மிகக் கூடிய அதிகாரப் பரவலாக்கத்ததிற்கு விரிவடையும் ஒன்றாக தென்பட வேண்டும்.´ (அழுத்தம் சேர்க்கப்பட்டது)

வல்லுநர் குழு விரிவான அதிகாரப் பரவலாக்கத்திற்கும் வடக்குக் கிழக்கு இணைப்பு விடயம் தொடர்பான மூன்று வெவ்வேறு தெரிவுகளுக்குமான பரிந்துரை ஒன்றை மேற்கொண்டது. யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் இலங்கை அரசாங்கமும்´…

அரசியலமைப்பிற்கான 13து திருத்தத்தின் முழுமையான அமுலாக்கமும் காத்திரபூர்வமான அதிகாரப் பரவலாக்கத்தை அடைவதற்கேற்றவாறு அதனை மேலும் விருத்தி செய்வதுமே´ நல்லிணக்கத்திற்கான முதன்மையான வழியாகுமென்று கூட்டறிக்கைகள் மூலம் பல வாக்குறுதிகளை ஐநா விற்கும் இந்தியாவிற்கும் வழங்கியிருந்தனர்.

இந்த வாக்குறுதிக்கு இரண்டு உறுப்புகள் இருந்தன. முதலாவது, ஏற்கெனவே அரசியலமைப்பின் ஓர் அங்கமாகவிருப்பதும் மாகாணங்களுக்கான பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்பாக ஓரளவு அதிகாரப் பரவலாக்கத்தையும் அடுத்தடுத்து இருக்கும் இரண்டு அல்லது மூன்று மாகாணங்களின் இணைப்பிற்கான ஏற்பாடுகளையும் கொண்டடிருப்பதுமான 13 வது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கமாகும். இது தொடர்பாக, உரிய தீர்மானமேற்கொள்வோர் சம்பந்தப்பட்ட மாகாண சபைகளுக்குள் இருப்பவர்கள் மாத்திரமேயன்றி, வேறு மாகாணங்களில் இருப்பவர்கள் அல்ல.

எனவே, 13வது திருத்தின் முழுமையான அமுலாக்கததிற்குக் கோரிக்கை விடுவதன் மூலம் ததேகூ அரசியலமைப்பைப் பாதுகாக்கின்றது. ஜனாதிபதி தற்போது செய்யக் கடமைப்பட்டிருக்கும் வாக்குறுதிகளின் நிறைவேற்றத்திற்காக அவருக்கு நாம் வழங்கும் ஓர் ஒத்துழைப்பாகவும் அது அமைகிறது. ஜனாதிபதியளித்த வாக்குறுதியின் இரண்டாவது உறுப்பு மேலும் காத்திரபூர்வமான அதிகாரப்பரவலாக்கத்தை நோக்கி 13வது திருத்தத்திற்கு அப்பால் செல்வதாகும்.

மேலும் கூடிய சமஸ்டிக் கட்டமைப்பை நோக்கி நகர்வதையே இது கருதும். எனவே, சமஸ்டி கட்டமைப்பொன்றில் காத்திரபூர்வமான அதிகாரப் பரவலாக்கத்திற்கான ததேகூ பின் கோரிக்கையானது, ஜனாதிபதியும் இலங்கை அரசாங்கமும் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஒரு செயலாகவே கருதப்படவேண்டும். இந்த ஒத்துழைப்பை எவ்வாறு ´அரசியலமைப்பை மீறியமை´, ´தஈவிபு நிகழ்ச்சி நிரல்´, ´பிரிவினைவாதம்´ என்றெல்லாம் கூறமுடியும் என்பது புரிந்து கொள்ள முடியாத புதிராகவே உள்ளது.

தெளிவுபடுத்தப்பட வேண்டியது என்னவெனில், ததேகூ எல்லோருடைய எதிர்வினைகளுக்கும் தலை குணியாது என்பதாகும். எமது நிலைப்பாட்டில் நாம் தளராத நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என்பதோடு, நாம் விடுத்திருக்கும் அறிக்கைகளிலிருந்து தூர விலகிச் செல்லுமாறு எங்களை யாரும் அச்சுறுத்தி அடிபணிய வைக்கவும் முடியாது.

எனவே, தமிழ் மக்களின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற ஒரு ஐக்கிய இலங்கைக்குள் சமஸ்டி கட்டமைப்பொன்றினுடாக சுய நிர்ணயத்தைப் பிரயோகிப்பதற்கான எமது மக்களின் உரிமையை நாம் மீள வலியுறுத்துகிறோம். எனவே, தேசிய பிரச்சனையை தீர்ப்பதற்கு போதுமானதல்லவெனினும், பதின்மூன்றாவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கத்தையும் அதற்கப்பால் செல்ல வேண்டியதையும் ஒரு தேவையான நடவடிக்கையாக நாம் வலியுறுத்துகிறோம்.

Related Posts