வடக்கு தேர்தலில் த.தே.கூ வெற்றி பெற நாங்கள் பூரண ஆதரவு, ஜனநாயக மக்கள் முன்னணி பகிரங்க அறிவிப்பு

manoவடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி தாம் ஆதரவு வழங்கப்போவதாக ஜனநாயக மக்கள் முன்னணி பகிரங்கமாக அறிவித்துள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் வடக்கு மாகாண சபையில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறுவதற்கு தாம் பூரண ஆதரவினை வழங்குவதாக ஜனாநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் பகிரங்கமாக இன்று அறிவித்துள்ளார்.

இதனை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று யாழ்ப்பாணம் கிறீன்கிறாஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

வடமாகாண சபைத் தேர்தலில் 5 மாவட்டங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை தமிழ் மக்கள் வெற்றி பெற வைத்து உலகத்தின் கவனத்தையும் தென்னிலங்கையின் கவனத்தையும் வடமாகாணத்தின் பக்கம் திரும்பி பார்க்க வைக்க வேண்டும்.

நாங்கள் ஒரு தேசிய இனம் தேசிய இனத்திற்கான உரிமைகளை போராட்டம் ஜனநாயக ரீதியில் இடம்பெறுகின்றது. அவற்றிற்கான உரிய பதிலை வழங்க வேண்டியது இலங்கை அரசின் கடமை.அத்துடன் இதனை கண்காணித்து தீர்வினைத் தேடித் தருவது சர்வதேசத்தின் கடமையாக இருக்கின்றது என்பதனை தமிழ் மக்கள் எடுத்துக் கூற தயாராக உள்ளனர். இதற்கு எந்த விதமான நிபந்தனைகளும் இன்றி ஜனநாயக மக்கள் முன்னணியாகிய நாம் எமது முழு அரசியல் ஆதரவினையும் தெரிவிக்கின்றோம்.

அத்துடன் தெற்கில் உரிமைக்கு குரல் கொடுக்கும் அதேவேளை, வடபுலத்தில் உறவுக்கு கரம் கொடுக்க வேண்டும் என்ற தெளிவான கொள்கையின் அடிப்படையில் செயற்படுகின்றோம்.

மேலும் மாகாண சபை முறைமை தமிழ் தேசிய எதிர்பார்ப்புக்களுக்கு ஈடு செய்யக் கூடிய பதில் அல்ல என்பது தெரிந்த விடயம். இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உலகிற்கு அறிவித்துள்ளது அதனை நாமும் ஏற்றுக்கொள்கின்றோம்.

இந்த அரசு போர் முடிந்த பிறகு ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல், உள்ளூராட்சி தேர்தல் ஆகியனவற்றை நடாத்தியுள்ளது. அதுபோல மாகாண சபை முறைமையினை அங்கீகரிக்கும் முகமாக வடமாகாண சபைத் தேர்தலை நடாத்துவதில் தவிர்த்துக் கொண்டுள்ளது. ஏனெனில் கட்டமைப்புக்குள் வரக்கூடிய வடமாகாணத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கையில் தரக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது.

இருப்பினும் வடக்கு மாகாண தேர்தல் வடக்கில் வாழும் மக்களுக்கு மட்டுமல்ல. நாடுமுழுக்க வாழும் மக்கள் புலம்பெயர் தமிழ் மக்கள் அனைவருக்கும் பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கில் தமிழ் தேசிக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் அதுவே தெற்கில் இருக்கும் எமக்கும் பாரிய அரசியல் நம்பிக்கையை ஏற்படுத்தும். இந்த தேர்தலில் கூட்டமைப்பு மாபெரும் வெற்றி பெற நாம் ஆதரவு வழங்குகின்றோம் என்றார்.

யாழ்.மாவட்ட இராணுவத் தளபதியாக கடமையாற்றும் மஹிந்த ஹத்துருசிங்க யாழில் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரத்பித்துள்ளார். அக்கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 24 ஆவது கட்சியாக உள்ளது’ என தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 23 அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. 24 ஆவது கட்சி ஒன்றை ஹத்துருசிங்க நெறிப்படுத்தி வருகின்றார். இதுதான் சாவகச்சேரியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னிணில் உள்ள சுத்திரக்கட்சியுடன் மோதிக்கொண்டிருக்கின்றது.

இது அவர்களின் கட்சிப் பிரச்சனை. அதுதொடர்பில் எமக்கு அக்கறையில்லை. இருந்தாலும் இராணுவ மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கே ஹத்துருசிங்க முயற்சிக்கின்றார்’ என்று மனோ கணேசன் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்கினேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், சுமந்திரன், ஜனநாயக் மக்கள் முன்னணியைச் சேர்ந்த பிரபாஸ்கரா, குகவரதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts