வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிராந்தியமாகவும், ஏனைய மாகாணங்கள் ஏழையும் இணைத்து சிங்கள மொழியை அடிப்படையாகக் கொண்ட வேறு பிராந்தியமாகவும் நிர்வகிக்கவேண்டும் என்று வடமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் தீர்மானத்தை, மேல் மாகாண சபை ஏகமனதாக நிராகரித்துள்ளது.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 15 பேர் ஒன்றிணைந்து, அவைக்கு நடுவே நேற்றுச் செவ்வாய்க்கிழமை அமர்ந்திருந்து, வடமாகாண சபையின் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் நிஸாந்த ஸ்ரீ வர்ணசிங்க, இந்த நிராகரிப்பு யோசனையை முன்வைத்தார். அதனை, ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் ஜோர்ஜ் பெரேரா வழிமொழிந்தார்.