வடக்கு, கிழக்கு மாகாணங்கள் வேறுபட்ட தன்மையுடையன – வடமாகாண முதலமைச்சர்

vicky0vickneswaran‘வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இலங்கையின் ஏனைய மாகாணங்களை விட வேறுபட்ட பிரதேசங்கள் என்பதையும் எமது பிரச்சினைகள் வேறுபட்ட தன்மையுடையன என்பதனையும் நாங்கள் அரசியல் ரீதியாக எடுத்தியம்பி வருகின்றோம்’ என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளின் தடகள மற்றும் மைதான போட்டிகள் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (23) ஆரம்பமாகியது.

இந்தப் போட்டிகளினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

‘வடக்கு கிழக்கு மாகாணங்களின் மொழி வேறு, மதங்கள் வேறு, நிலம் வேறு, மக்கள் வாழ்க்கை முறை வேறு என்பதுடன் அண்மையில் எமக்கு நேர்ந்த அனர்த்தங்கள் மற்றைய மாகாணங்களைப் பாதிக்கவில்லை என்பதால் எமது பிரச்சினைகளும் வேறு, அவற்றிற்கான பரிகாரங்களும் வேறு என்று அரசியலில் நாம் அடையாளங் காட்டி வருகின்றோம்.

அத்துடன், எமது தகமைகளும் திறன்களும் வேறு என்பதை நாங்கள் அகில இலங்கை ரீதியாகக் காட்டுவதென்றால் அது விளையாட்டுகளின் மூலமே காட்ட முடியும்.

எமது மாணவ சிரோமணிகள் விளையாட்டு மைதானத்தில் மற்றவர்கள் யாவரையும் விஞ்சியவர்கள் என்பதை எடுத்துக்காட்ட முன்வரவேண்டும். தண்ணீரினுள் ஒரு பிளாஸ்திக் பந்தை அமுக்கி வைத்திருக்க முடியாது.

அது எப்படியாவது மேல் நீர் மட்டத்திற்கு வந்தே தீரும். போரில் துவண்டு போன எமது சமுதாயத்தின் இளைஞர் கூட்டம் மீண்டும் வலுப்பெற்று வீறு பெற்றுத் தமது விசேட திறன்களை வெளிக்காட்டுவதென்றால் அது விளையாட்டுப் போட்டிகளில் தான் முடியும்.

சகல பிரதேசங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வீர வீராங்கனைகளை உருவாக்குவது எமது தலையாய கடமையாகும். கல்வியும் விளையாட்டும் தான் எங்கள் பாடசாலை மாணவ மாணவியரின் இரு கண்களாக இருக்க வேண்டும்.

சிலருக்கு விளையாட்டுக்கள் மீது நாட்டமிருக்காமல் இருக்கலாம். அத்தகையவர்கள் சங்கீதம், நடனம், ஓவியம், சிற்பம் என்று ஏதாவதொரு கலையில் தமது திறனை வெளிக்கொண்டு வர வேண்டும். ஏன் கணினியிலுங் கூடத் தமது திறனை வெளிக்காட்டலாம்.

ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். மனித வாழ்க்கையில் மேம்பாடடைய வேண்டும் என்றால், கல்வி மட்டும் போதாது.

கல்வி என்பது எமது அறிவுக்கு விருந்து. ஆனால் அந்த அறிவைத் தாங்கும் எமது உடலுக்கு வலு கொடுக்கவும், பலம் பெறச் செய்யவும் விளையாட்டுக்களில் ஈடுபடவேண்டும்.

சுவர் இருந்தால்த்தான் சித்திரம் வரையலாம் என்பார்கள். சுவர் எமது உடல். சித்திரம் நாம் எமது கல்வியிலோ கலைகளிலோ பெறும் முன்னேற்றம். இந்த உடலை நன்நிலையில் வைத்திருப்பதற்கே விளையாட்டுக்கள் தேவைப்படுகின்றன. ஆகவே கலைகளில் ஈடுபடுபவர்களும் ஏதோ ஒரு வழியில் உடலைப் பராமரித்து வர வேண்டும்.

ஒலிம்பிக்கில் ஒரு வாசகம் பிரபல்யம் பெற்றது. ஒலிம்பிக்கில் பங்கு பற்றுவதே முக்கியம், வெல்வது அன்று என்பதே அது. விளையாட்டுக்கள் வெறுமனே உடலுக்கு நன்மை பயப்பன என்று எண்ணுவது மடமை. அவை பலவற்றை எமக்குப் போதிக்கின்றன. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதை விளையாட்டுக்கள் எங்களுக்குப் போதிக்கின்றன.

என்னால் முடியும் என்று முயற்சியில் ஈடுபடுபவனுக்கு இலகுவில்; வெற்றி கிடைக்கின்றது. எந்தவொரு இலக்கையும் முன்வைத்து அதனையே குறிக்கோளாக நாடி அதன்பால் செல்பவனுக்கு வெற்றியே கிடைக்கும். உங்கள் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்த்தேன். பெருமிதம் அடைந்தேன்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts