வடக்கு, கிழக்கு காணிகள் விடுவிப்பையும், தேசிய பாதுகாப்பையும் இணைத்து முடிச்சுப் போட வேண்டாம்!

காணி எடுத்தல், காணி கொடுத்தல் பற்றி நாம் இங்கு சிந்தித்துக் கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருக்கின்றோம். ஆனால், எமது மக்களின் சொந்த காணி, நிலங்களை விடுவித்தல் குறித்து இந்த அரசு என்ன தீர்மானத்தை எடுத்திருக்கின்றது என்று இந்தச் சந்தர்ப்பத்திலே நான் கேட்க விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், இன்று எமது மக்கள் தங்களது காணி, நிலங்களை விடுவிக்குமாறு கோரி அகிம்சாவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கோருகின்ற இவர்களது காணி, நிலங்கள் வெறுமனே குடியிருப்பு நிலங்கள் மாத்திரமல்ல. இம் மக்களது வாழ்வாதாரங்கள் அந்தக் காணி, நிலங்களில் முடக்கப்பட்டுள்ளன. அவற்றை விடுவித்து, அந்த மக்களிடம் ஒப்படைத்தால், அந்த மக்களது வாழ்க்கையை நிம்மதியாக அமைத்துக்கொள்ள முடியும் என்பது அந்த மக்களின் நியாயமான கோரிக்கையாக இருக்கிறது. இந்தக் காணிகள் பொருளாதார வளமிக்க, செழிப்பான விவசாய மற்றும் கடற்றொழில் சார்ந்த காணிகளாகும்.

தேசிய பாதுகாப்பு என்பது எமக்கு அவசியமாகும். அதற்குரிய எற்பாடுகளை மேற்கொள்வதற்கு பொருளாதார வளமற்ற அரச காணிகள் பல வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தாராளமாகவே இருக்கின்றன.

எனவே, எமது மக்களின் பொருளாதார வளமிக்க நிலங்களை அம் மக்களிடம் கையளித்தல் என்பது, இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் வலு சேர்ப்பதாகவே அமையும் என்ற நிலை இருக்கும்போது, அந்தக் காணிகளில் கட்டடங்களை மேற்கொண்டும், பாழடைந்து போவதற்கு விட்டும், சுற்றிலும் முட்கம்பி வேலிகள் போட்டு அடைத்தும் வைக்கப்பட்டுள்ளன.

இங்கு ஒரு விடயம் குறித்து நாம் முக்கிய அவதானத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. அதாவது, வடக்கு, கிழக்கிலே எமது மக்களின் காணி, நிலங்களை விடுவித்தால் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற ஒரு கதை கூறப்பட்டு வருகிறது. இதில், எந்த வகையிலும் உண்மையில்லை என்றே நான் கூறுகின்றேன். தேசிய பாதுகாப்பில் அக்கறையுள்ள எவரும் இதை ஏற்றுக் கொள்வார்கள் என நான் நினைக்கின்றேன்.

தேசிய பாதுகாப்பினை உறுதிபடுத்திக் கொண்டிருப்பதற்கு இராணுவம் தேவை என்கின்ற நிலையில், அதற்குத் தேவையான இராணுவம் தரித்திருப்பதற்கு பொருளாதார வளம் குன்றிய அரச காணிகள் பல இருக்கின்ற நிலையில், எமது மக்களின் வாழ்வாதார வளங்களைக் கொண்ட காணிகளில் மட்டும்தான் அவர்கள் தரித்திருக்க வேண்டும் என்பதை எப்படி ஏற்றுக் கொள்வது?

எனவே, தேசிய பாதுகாப்பையும், எமது மக்களின் காணி, நிலங்கள் விடுவிப்பையும் இணைத்து முடிச்சுப் போடக் கூடாது எனக் கேட்டுக் கொள்வதுடன், அந்த வகையில் யோசித்து எமது மக்களின் காணி, நிலங்கள் விடுவிப்பை மேலும் தாமதமாக்கக் கூடாது எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

கேப்பாப்புலவு மக்கள் போராட்டத்தை இனவாதக் கண்ணோட்டத்தில் பாரக்கின்ற ஒரு நிலை தென் பகுதியில் சில தரப்பினரிடம் காணப்படுகின்றது. இது அந்த மக்களது வாழ்க்கைப் பிரச்சினையே அன்றி எவரதும் அரசியல் பிரச்சினை அல்ல என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணி, நிலங்கள் விடுவிப்பு, காணிப் பிணக்குகள், காணிகளின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகள் உச்சத்தில் நிலவுகின்ற நிலையில், நேற்றைய தினம் இரவு மட்டக்களப்பு, களுதாவளைப் பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளரான திரு. நேசகுமார் விமல்ராஜ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில், காணிப் பிரச்சினை பெருமளவில் இருக்கின்ற ஒரு சூழ்நிலையிலேயே இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.

அதே நேரம், நேற்றைய தினம் வலிகாமம் வடக்கு மக்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற காணி மீட்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்த நிலையில் அம் மக்களுக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் அச்சுறுத்தல்களை விடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

இவ்வாறான சம்பவங்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்தச் சம்பவங்கள் குறித்து இந்த அரசு உடனடி விசாரணைகளை நடத்தி, உரிய நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

மட்டக்களப்பு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமானது காணி தொடர்பிலான விடயங்களைக் கையாளுகின்ற அரச அதிகாரிகள் மத்தியில் மட்டுமல்லாது, பொதுவாக அரச அதிகாரிகள் மத்தியிலேயே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

மேலும், கடந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் வீதிஅபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென பெறப்பட்ட எமது மக்களின் காணிகளுக்கான நட்டஈடுகள் இதுவரையில் வழங்கப்படவில்லை எனத் தெரிய வருகிறது.

அந்த வகையில், பருத்தித்துறை – யாழ்ப்பாணம் வீதி, காங்கேசன்துறை – யாழ்ப்பாணம் வீதி, பலாலி – யாழ்ப்பாணம் வீதி அடங்கலாக பல வீதிகள் அகலமாக்கப்பட்டு இரு வழிப் பாதைகளாக மாற்றப்பட்டன. இதன்போது பெறப்பட்ட மக்களது தோட்டக் காணிகள் குறித்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு, விண்ணப்பங்களும் பூர்த்தி செய்யப்பட்டு, 5 வருடங்களுக்கு மேலாகியும் குறித்த மக்களுக்கு இன்னும் அந்த நட்டஈடுகள் கிடைக்கப்பெறவில்லை என்றே தெரிய வருகின்றது எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

பெருந்தெருக்கள் கௌரவ அமைச்சர் அவர்கள் இது தொடர்பில் உரிய அவதானமெடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts