வடக்கு, கிழக்கு இணைப்பை சம்மதிக்க மாட்டோம் : எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படுவதற்கு, நாங்கள் ஒரு போதும் சம்மதிக்க மாட்டோம். இந்த விடயத்தில், நாங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றோம்” என்று, புனர்வாழ்வளிப்பு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

“கிழக்கு, ஓர் இனத்துக்குச் சொந்தமானது அல்ல. அதேபோன்று வடக்கும் ஓர் இனத்துக்கு சொந்தமானது அல்ல இந்த விடயத்தில் முஸ்லிம்கள் தெளிவாக இருக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

“கிழக்கு மாகாண முதலமைச்சரும் அவருடைய கட்சி சார்ந்த தலைவரும் முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து வடக்கையும் கிழக்கையும் இணைத்து இந்த மாகாணத்தில் வாழுகின்ற மூவின மக்களையும் இரத்த கறைக்குள் கையளிப்பதற்கு, முயற்சிக்கின்றனர். அதற்கு நாங்கள் இடமறிக்க கூடாது” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைரின் நிதியொதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களை, மட்டக்களப்பு ஏறாவூர் பதீயுதீன் மஹ்மூத் வித்தியாலயத்துக்கு கையளிக்கும் நிகழ்வு, நேற்று (18) திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “இனிவரும் காலங்களில் மாகாண சபைத் தேர்தல், தொகுதிவாரி அடிப்படையில் நடைபெறவுள்ளது மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது 11 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுகிறார்கள். அவற்றையும் தொகுதிவாரி அடிப்படையில் மாற்ற வேண்டும்.

நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகங்களையும் ஒவ்வொரு தொகுதியாக மாற்றுங்கள். இதனால், இனப்பிரச்சினை தொகுதிப் பிரச்சினைகள் எற்படாதென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் ஆலோசனை முன்வைத்துள்ளோம் அது சிறந்த ஆலோசனை என ஏற்றுள்ளார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்கள் உள்ளன தற்போது 11 உறுப்பினர்கள் உள்ளார்கள் மூன்று உறுப்பினர்களை அதிகரிக்க வேண்டி வரும்.

மாவட்டத்தில் தமிழ் – முஸ்லிம் மக்கள் முரண்படாமல் பிளவுகள் ஏற்படாமல் தங்களுடைய பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றிக்கொண்டு எவ்வாறு ஒற்றுமையாக செயற்படுவது என்பது பற்றி சிந்திக்கவேண்டும்.

கிழக்கு மாகாணத்தில், தமிழ் சகோதரர் சந்திரகாந்தன் முதலமைச்சராக இருந்தார். ஹாபிஸ் நஸீர் இன்று முதலமைச்சராக இருக்கின்றார். விமல வீர திஸாநயக்க முதலமைசராக நாளை வரக்கூடும்.

இவ்வாறு, மூவின மக்களும் ஒற்றுமையாக நிர்வாகம் செய்யக்கூடிய ஒரே மாகாணம் கிழக்கு மாகாணம்தான்.

கிழக்கு மாகாணத்தை வடக்குடன் இணைத்து கிழக்கை அநாதரவாக்கி மீண்டும் இந்த மண்ணிலே இரத்த ஆற்றை ஓடவைத்து, யுத்த சூழலை உருவாக்குவதற்கு, நாங்கள் இடமளிக்க மாட்டோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் அல்லது ஏனைய கட்சிகளுடைய பிரதிநிதிகளினால் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான சில ஆலோசனைகள் முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி இடைக்கால அறிக்கையை பிரதமர், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

யுத்தம் மாத்திரம் முடிவடைந்துள்ளது. இன்னும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை.

இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு இந்த அரசாங்கம் கொடுக்க தவறுமாகவிருந்தால் பெரும் நெருக்கடி நிலைமையே ஏற்படும்.

அதிகாரங்கள் நிறைந்த தங்களுடைய நிர்வாகத்தை தாங்களே செய்யக்கூடிய வளமான மாகாணசபைகள் உருவாக்கப்பட வேண்டும் வடக்கு மற்றும் கிழக்கு என தனியான மாகாணங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலமே எங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றி இன்று யாராவது பேசிக்கொண்டிருந்தால் அது சாத்தியப்படாத விடயமாகும்.

அரசாங்கத்தின் பலம் எதிர்க்கட்சிகளின் பலம் ஆகிய சூழ்நிலைகளை சாத்தியமான முறையில் பயன்படுத்தி எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், முஸ்லிம்களுடைய நிலைப்பாட்டை வெளியிலும் பேசவில்லை நாடாளுமன்றத்திலம் பேசவில்லை எழுத்து மூலமாகவும் கொடுக்க வில்லை.

வடக்கும் கிழக்கும் மீண்டும் இணைவதற்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என்று மிகத் தெளிவாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பேசவேண்டும். எதிர்காலத்தில் இதுதான் எங்களுடைய பிரச்சினையாகும்” என்றார்.

Related Posts