வடக்கு கிழக்கு இணைப்பு குறித்த த.தே.கூட்டமைப்பு நிலைப்பாட்டில் தளர்வு!

வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டுமென்ற தனது நீண்டகால கோரிக்கையை தளர்த்தி, இவ்விடயம் குறித்து முஸ்லிம் சமூகத்துடன் கலந்துரையாடப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ளதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆளும் கட்சியுடன் கடந்த வருடம் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தமது யோசனைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்தது.

13 ஆவது திருத்தச்சட்டத்தில் அதிகாரங்கள் தொடர்பான மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண சபைகளுக்கும் பொதுவான பட்டியலை நீக்க வேண்டுமென த.தே.கூட்டமைப்பு கோரியிருந்தது. கல்வி, உயர் சுகாதாரம், கமநல சேவைகள், விவசாயம் முதலான விடயங்கள் அப்பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

மேற்படி அதிகாரங்கள் முழுமையான மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என தனது யோசனைகளில் த.தே.கூ. தெரிவித்துள்ளது. நிதி மற்றும் வரி அதிகாரங்கள், காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுககு வழங்கப்பட வேண்டும் என அக்கட்சி கோரியுள்ளது.

அதேவேளை கடன்கள் மற்றும் நாணயம், தேசிய பாதுகாப்பு, விமான நிலையங்கள், துறைமுகங்கள் முதலான அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடம் இருக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.

அதிகார பரவலாக்கலுக்கான அலகாக வடக்கு கிழக்கு இணைப்பை அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இவ்விடயமானது முஸ்லிம் கட்சிகளுடன் கலந்துரையாடப்பட வேண்டியதாகும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது தொடர்பான முரண்பாடு காரணமாக அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இவ்வாரம் நடைபெறவுள்ள கட்சியின் வருடாந்த சம்மேளனத்தில் இவ்விடயம் தொடர்பாக ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts