1987 ஆம் ஆண்டு இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் 13 திருத்த சாசனத்தின் மூலம் வடக்கு கிழக்கு இணைப்பு இருந்து வந்த நிலையில் 18 வருடத்திற்குப் பின்னர் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் பிரிக்கப்பட்டிருக்கின்றது என எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்மந்தன் தெரிவித்தார்.
கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரக் கூட்டம் நேற்று முன்தினம் மாலை நற்பட்டிமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “முன்னாள் ஜனாதிபதியின் காலத்தில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் பயன் கிடைக்கவில்லை. அதனால் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு தமிழ் மக்கள் வாக்களித்து இருக்கின்றனர். இதன் பயனாக நாட்டில் தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்தை வழங்க வேண்டும் என்பதற்காக ஆட்சி மாற்றம் செய்யப்பட்டது.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் மாகாண சபைக்கான அதிகாரப் பகீர்வு அரசியல் சாசனத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட போதிலும் அது முழுமையான தீர்வாக அமையவில்லை அது நிலையான உறுதியான நிரந்தரமான அதிகாரப் பகிர்வாக அமையாதமையால் அன்று நாம் போட்டியிடவில்லை.
30 வருடகால ஆயுதப் போராட்டத்தின் பின்னர் தமிழ் மக்கள் உறுதியாகவும் ஒற்றுமையாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய ஆணையின் பயனாலேயே இன்று தமிழ் மக்களின் பிரச்சினை சர்வதேசம் வரை தமிழ்க் கூட்டமைப்பு முன்னெடுப்பதற்று உதவியாக இருக்கின்றது
உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியல் சாசனத்தின் படி உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகராங்கள் பரவலாக்கப்படும். அதுமட்டுமல்ல மத்திய அரசாங்கமோ மாகாண அரசாங்கமோ பல்வேறு சட்டங்களை உருவாக்கின்ற போது அதிகமான சட்டங்களை அமுல்படுத்துகின்ற அதிகாரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற விடயம் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
70 வருடகாலமாக நாங்கள் போராடி பல துன்பங்களை அடைந்து இருக்கின்றோம். அக்காலத்தில் அரசியல் அதிகாரங்களைப் பெறுவதற்காகவும் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் சாத்வீக ரீதியிலும் ஜனநாயகவழியிலும் போராடியதுடன் அக்காலத்தில் பல ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டு இருக்கின்றோம். அதன் பின்னர் 30 வருடகாலம் ஆயுதப் போராட்டம் இடம்பெற்றது. அதிலும் பல இழப்புக்களை தமிழ் மக்கள் இழந்ததுடன் 2009 ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனித்தது.
மேலும் இராஜதந்திர ரீதியில் பல்வேறு போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றது. தந்தை செல்வா 1949 தமிழரசுக் கட்சியினை ஆரம்பித்து 1956 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தேர்தல் அனைத்திலும் வடக்கு கிழக்கு மக்கள் ஒற்றுமையுடன் கொள்கை அடிப்படையிலும் வாக்களித்து இருந்தனர்.
சர்வதேசம் இன்று எமக்கு அக்கறை காட்டி வருகின்றது ஐ.நாடு மனித உரிமை பேரவையில் 2012ஆம் ஆண்டில் இருந்து 2017வரைக்கும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது. உண்மையின் அடிப்படையில் நீதி மற்றும் அதற்கான பரிகாரம் வழங்கப்படவேண்டும். தேசியப் பிரச்சினைக்குத் உரியதீர்வு வழங்கவேண்டும் என்று ஐ.நா மனித உரிமை பேரவையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டும் வாக்குறுதி அளித்துள்ளது.
இக்கருமத்தை நிறைவேற்றுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்ணும் கருத்துமாக கையாண்டு வருகின்றது. இதனை சர்வதேசமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இத்தருணத்தில் தமிழ் மக்களாகிய நீங்கள் வழங்கும் ஆதரவுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கரங்களைப் பலப்படுத்தும்.
மக்களுக்கு அரசியல் தீர்வு விடயத்திற்கு மேலாக, காணி, கைதிகள், காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகள் இருக்கின்றன. ஆட்சி மாற்றத்தின் பிறகு பல இடங்களில் காணி விடுவிக்கப்பட்டு இருக்கின்றது . அது போன்று காணாமல் போனோர் தொடர்பானஅலுவலகம் அமைக்கப்படவுள்ளது. அவ்வலுவலகத்திற்கு 7 பேர் சிபார்சு செய்யப்பட்டு நியமிக்கப்படவுள்ளனர். அதற்கான செலவுக்காக 1400 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றது. இது தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் நடத்திய கலந்துரையாடலாலே நடைபெற்றது.
காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு காணாமல் போனோர் உயிருடன் இருக்கின்றனரா இல்லையா என ஒருமுடிவு சொல்லப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். எம்மை விமர்சிப்பவர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கின்ற எந்தக் கருமங்களையும் முன்னெடுக்க இல்லை. இவ்வாறனவர்களுக்கு நீங்கள் வழங்கும் வாக்குகள் வீணானதாக அமையும்.
அதேவேளை கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படவில்லை. அதற்கான அதிகாரம் சரியாக வழங்கப்படவில்லை. இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அமைச்சரையும் பிரதமரையும் சந்தித்துள்ளேன் அதற்கான தீர்வு விரைவில் எட்டப்படும்.
மேலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயம் சம்பந்தமாக முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. அரசியல் தீர்வு விடயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கணிசமான துரம் பயணித்துள்ளது. இன்னும் ஒரு முடிவும் கிடைக்கவில்லை. அதனைப் பெறுவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
நாடாளுமன்றம் ஒரு அரசியல் சாசனமாக மாற்றப்பட்டு, நடவடிக்கைக்குழு அமைக்கப்பட்டு, உப குழு அமைக்கப்பட்டு, இடைக்கால அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதங்கள் நடைபெற்று, தேர்தல் நிறைவுபெற்றபின்னர் அது முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது அரசியல் நடைமுறையை முன்னெடுத்துக்கொண்டு செல்வதற்காக அனைத்து தமிழ் மக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இக்கூட்டத்திற்குப் பிரதம அதிதியாக எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்மந்தன் மற்றும் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபையின் அமைச்சருமான கி.துரைராசசிங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கவீந்திரன் கோடீஸ்வரன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.