வடக்கு, கிழக்கு இணைந்தால் பிரிவினை எழும்! சிங்களம் கற்று சேர்ந்து வாழ வேண்டும்!!

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டால் தனி மாநிலம் எனக்கூறி தமிழ் – சிங்கள மக்களிடையே மீண்டும் ஒரு பிரிவினையை அரசியல்வாதிகள் ஏற்படுத்தக்கூடாது என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் கேட்டுள்ளார்.

அத்துடன் கடந்த கால சம்பவங்களை மறந்து சிங்கள மொழியைக் கற்றுக்கொண்டு அனைவருடனும் இணைந்து வாழக்கற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் போராளிகளுக்கு அமைச்சர் கூறியுள்ளார்.

புனர்வாழ்வு பெற்று சமூகமயமாக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 34 பேரை சுற்றுலாவாக புனர்வாழ்வு அமைச்சு கொழும்பிற்கு அழைத்து சென்றுள்ளது.

முன்னாள் போராளிகளை நுவரெலியா, கண்டி, கேகாலை ஆகிய பகுதிகளுக்கு அமைச்சு அழைத்துச் சென்றதோடு நேற்று வெள்ளிக்கிழமை பத்தரமுல்லையிலுள்ள ‘எங்கள் கிராமம்’ என்ற பகுதிக்கும் அழைத்துச் சென்றது.

இந்த நிகழ்வில் இராணுவ உயரதிகாரிகள், மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது உரையாற்றிய அமைச்சர் சுவாமிநாதன்,

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து மாநிலமொன்றை உருவாக்க வேண்டும் என்று தமிழ் அரசியல்வாதிகள் கூறிவருகின்றனர். இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்க நான் விரும்பவில்லை.

எனினும் வட,கிழக்கு இணைப்பு மற்றும் மாநிலங்கள் அமைப்பு போன்ற விடயங்களைக் கூறி, தமிழ் – சிங்கள மக்களிடையே மீண்டும் பிரிவினையை ஏற்படுத்துவதற்கு இனவாதிகள் வழியேற்படுத்தக்கூடாது.

முன்னாள் போராளிகள் கடந்தகால சம்பவங்களை மறந்து, சிங்கள மொழிகள் உள்ளிட்ட பிற மொழிகளையும் கற்றுக்கொண்டு ஒன்றறக் கலந்து வாழ வேண்டும் என்றார்.

Related Posts