வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் ஜனாதிபதியினால் பல்வேறு திட்டங்கள் ஆராய்வு.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலக்தில் இடம்பெற்றது.

இதன்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் காணிகள், பாடசாலைகள் விடுவிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் கைத்தொழிற்சாலைகளை மீள இயக்குவது தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக சிரேஷ்ட அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன்படி காணி விடுவிப்பு தொடர்பில் எதிர்வரும் தினங்களில் ஜனாதிபதி தலைமையில், தமிழ் பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் பங்குபற்றுதலுடன் விசேட கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வடக்கு, கிழக்கில் கைவிடப்பட்டுள்ள கைத்தொழில்களை மீள இயக்குவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. மன்னார் மடு புண்ணிய பூமியில் குடிநீர் வசதியை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதில் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் அதன் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் அபிவிருத்தி, வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை, ஆனையிறவு மற்றும் குரஞ்சைத்தீவு உப்பளங்களின் அபிவிருத்தி, அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் அபிவிருத்தி மற்றும் வடக்கில் சிறுகைத்தொழில்களை வலுவூட்டவும் மறுசீரமைக்கவும் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் மீளாய்வு செய்யப்பட்டது.

மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிரதான உபாய மார்க்க செயற்திட்டங்கள் தொடர்பாக பட்டிலொன்றினை முன்வைக்குமாறு சகல நிரல் அமைச்சுக்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அப்பிரதேசங்களின் அபிவிருத்திக்கு தமது ஆலோசனைகளையும் முன்வைக்குமாறு ஜனாதிபதி இதன்போது சகல மக்கள் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

இதேவேளை, வடக்கு கிழக்கில் போதைப் பொருட்களின் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி காவற்துறையினருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக பதிவாகி வருகின்ற வன்முறைகளை தடுப்பதற்கும், மக்களது சுமுகமான வாழ்க்கையை உறுதி செய்வதற்குமான நடவடிக்கைகளை துரிதமாகவும், விசேடமாகவும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பல்வேறு அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று பலரும் கலந்து கொண்டிருந்தனர்

அதேநேரம், நேற்றையக் கூட்டத்தில் அதிகபடியான உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில், இடவசதி கருதி, அடுத்தக் கூட்டத்தை நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ம் திகதி, வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் 3ம் கட்ட கூட்டம் நடைபெறவுள்ளது.

இதேவேளை, இந்த செயலணிக் கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவில்லை. எனினும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை தவிர, ஏனைய 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தவிர, அமைச்சர் மனோ கணேஷன், ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுடன், பிரதி அமைச்சர்களான அங்கஜன் ராமநாதன், காதர் மஸ்தான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

அடுத்தக் கூட்டத்தின் போது அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களையும் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts