தென்னிலங்கையுடன் ஒப்பிடும்போது வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சபைகளுக்குட்டபட்ட பிரதேசங்கள் நாற்பது வருடங்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எவ்வாறு சுனாமிக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறப்பட்டு பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டதோ அதே போல யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய விசேட கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்த் தேசியப் பேரவையின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் புத்தூரில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,
“வடக்கிழக்கைப் பொறுத்தவரை இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் அபிவிருத்திக்குரிய தேர்தல் அல்ல. உங்களுக்கு நன்றாகத் தெரியும் இந்த வடகிழக்குப் பிரதேசம் கடந்த 30 முப்பத்தைந்து வருடம் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசம். இந்தப் பிரதேசம் ஒரு ஆயுதப் போராட்டத்தைஅ கட்டி எழுப்பிய பிரதேசம் என்ற வகையில் ஸ்ரீலங்கா அரசினால் பொருளாதாரத் தடைக்கு உள்ளாக்கப்பட்ட பிரதேசம். இந்தவகையில் இப்பிரதேசம் இயற்கையாகப் பாதிப்படைந்த பிரதேசம் அல்ல. திட்டமிட்ட வகையிலே இந்த நாட்டினுடைய அரசாங்கம் ஒரு விடுதலைப் போராட்டத்தைத் தோற்கடிப்பதற்காக 30 முப்பத்தைந்து வருடங்களாக இந்தப் பிரதேசத்தை முடக்கி மக்களை வாழ முடியாத அளவிற்கு தங்களுடைய தொண்டைகளைப் பிடித்து இறுக்கி இந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேறினாலும் பறவாயில்லை அந்தப் போராட்டத்தை ஆதரிக்கக்கூடியவகையிலே பொதுமக்கள் இருக்கக்கூடாது என்ற அளவிற்கு அவர்களுடைய நிகழ்ச்சிநிரல் கடந்த முப்பத்தைந்து வருடங்களாக இருந்தது.
நாங்கள் வடக்கிழக்கு மண்ணை எடுத்துப்பார்த்தால் தென்னிலங்கையிலுள்ள உள்ளூராட்சிசபைகளோடு ஒப்பிட்டுப்பார்க்க முடியாத அளவிற்கு நாங்கள் நாற்பது வருடங்களுக்கு பின்னுக்கு நிற்கின்றோம். அதுதான் ஜதார்த்தம்.
ஆனால் ஸ்ரீலங்கை அரசைப் பொறுத்தவரையில் அவர்கள் உள்ளூராட்சி சபைக்கு நிதி ஒதுக்குகின்ற பொழுது தென்னிலங்கையின் தற்போதைய நிலையினை வைத்தே வடக்கு கிழக்கிற்கும் நிதி ஒதுக்குகின்றார்கள். இந்த உள்ளூராட்சி சபைகளூடாக எதைச் செய்வது என மக்களிடம் கேட்கின்றபோது வீதிகளையாவது போட்டுத்தாருங்கள் என்ற நிலையில்தான் வடக்கு கிழக்கு பிரதேசம் தற்போதும் இருக்கின்றது. இதனைத் தாண்டிய நவீன அபிவிருத்தித் திட்டங்களுக்குள் நகரமுடியாதுள்ளது. ஏனெனில் இங்கு அடிப்படைக் கட்டமைப்புக்களே சிதைந்துபோயுள்ளன. 40 ஐம்பது வருடங்களுக்கு முன்னர் எமது மக்கள் என்னென்ன அடிப்படை வசதிகளைக் கேட்டிருப்பார்களோ அதைத்தான் இன்றும் செய்யக்கூடியதாக உள்ளது.
அந்தவகையில் இந்த உள்ளூராட்சி சபைகளை சரியானமுறையில் கையாள்வதற்கு எமது அமைப்பு நேர்த்தியான தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றினைத் தயாரித்துள்ளது. அந்தம தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள அடிப்படை வசதிகளும் அபிவிருத்தித் திட்டங்களும் தென்னிலங்கைக்கும் வடக்கு கிழக்கிற்குமான நாற்பது வருட இடைவெளியை படிப்படியாகக் குறைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் முக்கிய மான ஒரு வேலைத்திட்டம் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தை போரால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக அடையாளப்படுத்தி சுனாமியால் தாக்கப்பட்ட பிரதேசங்களை எவ்வாறு கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கி கரையோரப் பிரதேசங்கள் புனரமைக்கப்பட்டதோ அதேபோல ஒரு விசேட பிரதேசமாகக் கருதி அந்தப் பிரதேசங்களைக் கட்டியெழுப்புவதற்காக சட்டரீதியான மாற்றங்களை ஏற்படுத்தி சர்வதேச நிதியம் ஒன்றினை உருவாக்கி நிதியினை வெளிநாடுகளில் இருந்து நேரடியாக உள்ளூராட்சி, மாகாண சபைகளூடாகப் பெற்று புனரமைக்கப்பட வேண்டும்- என்றார்.