வடக்கு – கிழக்கில் 50, 000 குடும்பங்களுக்கு கல் வீடு!!

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்ட 50 ஆயிரம் குடும்பங்களுக்கு செங்கல் மற்றும் சீமெந்திலான பாரம்பரிய நிலையான வீடுகளை அமைத்து வழங்குவதற்கான வேலைத்திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதற்கான ஒப்பந்தக்காரர்களிடம் கேள்விமனு கோரப்பட்டது. அதில் சமர்ப்பிக்கப்பட்ட கேள்விமனுக்களில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான வீடமைப்பு வேலைத்திட்டம், ஐக்கியநாடுகள் சபையின் திட்டம் தொடர்பான அலுவலகம், இலங்கையில் மனித நேயத்திற்கான நிழல் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் ஆகியவற்றால் முன்னெடுக்கப்படும் இலாபத்தை இலக்காக கொள்ளாத தொண்டு அமைப்புகளால் சமர்ப்பிக்கப்பட்ட வீடமைப்பு நிர்மாணத்துறையில் 3 மாற்று ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன் இவை தொடர்பில் அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சு இணக்கப்பாட்டு குழுவின் மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக முதற்கட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இவ்வாறான 25 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு இந்த அமைப்புக்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைவாக மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Related Posts