வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் நிரந்தரமான கல்வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 50 ஆயிரம் நிரந்தரமான கல்வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தேசிய ஒருங்கிணைப்புக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“30 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு நிரந்தரமான கல்வீடுகளை வழங்குவதற்காக அமைச்சரவைப் பத்திரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இந்த நிரந்தரமான கல் வீட்டுத்திட்டம் தொடர்பான கேள்வி கோரல்கள் முன்னெடுக்கப்படுவதுடன் அதற்கான நிதிப்படுத்தலுடன் இணைந்த கேள்வி கோரலாக இத்திட்டம் முன்னெடுக்கப்படுவது நிரந்தரமான நல்லிணக்கச் செயற்பாடாக நோக்குகின்றது.

இத்திட்டத்தின் கேள்வி மனுகோரல்கள் தொடர்பான வேலைத்திட்டங்கள் தேசிய ஒருங்கிணைப்புக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சினால் ஏனைய அமைச்சுக்களையும் நிறுவனங்களையும் இணைத்து முன்னெடுக்கப்படுகின்றது.

இவ்வீட்டுத்திட்டங்களுக்கான தேவைப்பாடுகளும் திட்ட தயாரிப்பும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் அபிவிருத்தி குழுவின் வழிகாட்டலின் கீழ் தேசிய ஒருங்கிணைப்புக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு பிரதமர் தலைமையிலான பொருளாதார முகாமைத்துவத்திற்கான அமைச்சரவை குழுவின் சிபாரிசுடன் அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒருங்கிணைப்புக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சின் அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts