வடக்கு, கிழக்கில் வீடுகளை இராணுவம் அழிக்கவில்லையாம்! முழுப்பொறுப்பும் புலிகளுக்குத்தானாம்!!

“வடக்கு, கிழக்கு இராணுவத்தினரால் வீடுகள் அழிக்கப்படவில்லை. அவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று சபையில் தெரிவித்த வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ, புலிகளால்தான் வீடுகள் அழிக்கப்பட்டன. அவர்கள்தான் இதற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.கூறினார்.

வடக்கு, கிழக்கில் இன, மத, கட்சி பேதங்களைக் கடந்து மீள்குடியேற்ற அமைச்சுடன் இணைந்து வீடமைப்புத் திட்டம் 2016 முதல் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இன, மத, கட்சி பேதங்களின் அடிப்படையில் வீட்டுத்திட்டம் இடம்பெறுவதாகக் குறிப்பிடப்பட்டது. எந்தக் காலத்திலும் இன, மத, கட்சி பேதங்களின் அடிப்படையில் வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்பதை நான் குறிப்பிடுகின்றேன்.

மேலும் வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரால் வீடுகள் அழிக்கப்பட்டன எனக் கூறப்பட்டது. இராணுவத்தினரால் வீடுகள் அழிக்கப்படவில்லை. யுத்தத்தால்தான் வீடுகள் அழிக்கப்பட்டன. அந்த யுத்தத்துக்கு புலிகள்தான் முழுப்பொறுப்பு. வீடுகள் அழிக்கப்பட்டமைக்கும் புலிகள்தான் முழுப்பொறுப்பேற்கவேண்டும்.

இராணுவத்தினர் நாட்டை மீட்டெடுத்தவர்கள். அவர்களால் வடக்கு, கிழக்கில் வீடுகள் அழிக்கப்படவில்லை. அப்படிக் கூறுவதையும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். புலிகளால்தான் யுத்தம் செய்யவேண்டிய நிலை இராணுவத்தினருக்கு ஏற்பட்டது.

இன்று நாட்டில் புலிப் பயங்கரவாதம் இல்லை. வடக்கு, கிழக்கு மக்களுக்குச் சிறந்த வீடமைப்புத் திட்டத்தை 2016 முதல் நடைமுறைப்படுத்த நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன. இந்த அமைச்சருடன் இணைந்து வீடமைப்புத் திட்டத்தை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.

மேலும், வடக்கு, கிழக்கின் காணிப் பிரச்சினைக்கத் தீர்வு காண ஜனாதிபதி பிரதமர் தலைமையில் திட்டமிடப்பட்ட செயற்பாடு நடைபெறுகின்றது” – என்றார். இதேவேளை, வடக்கில் சீமெந்து பகிர்ந்தளிப்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் உரிய ஆதாரங்களுடன் கடிதமொன்றைச் சமர்ப்பித்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts