வடக்கு கிழக்கில் விகாரைகள் அமைப்பதை அனுமதிக்க முடியாது : மணிவண்ணண்

வடக்கு கிழக்கில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை என்பதையும் 1000 விகாரைகள் அமைப்பது என்பதையும் அனுமதிக்க முடியாது என தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் யாழ். மாநகர வேட்பாளர் விசுவலிங்கம் மணிவண்ணண் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்திற்கு பதிலளிக்கும் முகமாக நேற்றயதினம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “வடக்கு கிழக்கில் 1000 விகாரைகள் அமைக்கப்போவதாக தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் சிங்கள மயமாக்கலை முன்னெடுக்க நல்லாட்சி அரசாங்கம் முனைகின்றது.

இலங்கையை மாறி மாறி அரசாட்சி செய்யும் அரசாங்கங்கள், மற்றையவர்களை விட தாம் சிங்கள மேலாதிக்கம் உடையவர்கள் என காண்பிப்பதற்கு முட்டி மோதிக்கொண்டிருக்கின்றார்கள்.

இடைக்கால அறிக்கை பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுப்பதை தெட்டத் தெளிவாக காட்டியிருக்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதற்கு இணங்கியிருக்கின்றது.

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுத்து வெளிவரவிருக்கும் புதிய அரசியலமைப்பை நிராகரிக்க வேண்டுமாக இருந்தால், இடைக்கால அறிக்கையினைப் பரிந்து பேசும் தரப்பினை தமிழ் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும்.

வடக்கு கிழக்கில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்க மாட்டோம். அந்தக் கோரிக்கையினை வலியுறுத்தி வரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆணை கொடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடகிழக்கில் விகாரை அமைக்கப்பட வேண்டுமாயின், அந்த உள்ளூராட்சி சபைகளின் அனுமதி பெற்றே அமைக்க வேண்டும். பௌத்த மத குரு ஒருவரின் உடல் தகனம் செய்ய முயற்சிகள் மேற்கொண்டிருந்த போது, அதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் யாழ். மாநகர சபையிடம் இருந்த போதும், எந்த அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்காத நிலையில் நாம் குரல் கொடுத்திருந்தோம்.

பௌத்த மதத்திற்கு ஆதரவு கொடுப்பதற்கு மௌனமாக இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சபைகளைக் கைப்பற்றுமாக இருந்தால், தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் காலங்களில் பௌத்த மயமாக்கலை தடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்.

சிங்கள பௌத்த மதத்திற்கு எதிராக குரல் கொடுப்பது போல் பௌத்த மயமாக்கலை தடுத்து நிறுத்த வேண்டுமாக இருந்தால், எமக்கு ஆதரவு அளியுங்கள். ஒரு போதும் நாம் விகாரைகள் அமைப்பதற்கு அனுமதி கொடுக்கப் போவதில்லை.

தமிழ் மக்கள் மட்டும் வாழும் பூமியில் சிங்கள பௌத்த மதத்திற்கு எதிராக போராடக்கூடிய ஒரே ஒரு தரப்பு தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியாகும். எனவே, மக்கள் எமக்காக வாக்களிக்க வேண்டுமென்றும்” என வேண்டுகோள் விடுத்தார்.

 

Related Posts