வடக்கு, கிழக்கு பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பௌத்தர்களின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.
தமிழ் மக்கள் பேரவை நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக சுட்டிக்காட்டியுள்ளது.
முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நிகழ்த்திய அகந்தையோடு சிங்கள பௌத்த விரிவாக்கமானது முன்னெப்போதும் இல்லாதளவில் முன்னெடுக்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ நிலைகளை அதிகரித்தல், அதனைச் சுற்றி பௌத்த விகாரைகளையும் சிங்களக் குடியேற்றங்களையும் நிறுவுதல் உட்பட தமிழர்களின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பண்பாட்டு மையங்களை இல்லாமலாக்கும் செயற்பாடுகள் வனபரிபாலனத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் போன்றவற்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த விரிவாக்கத்தை நிலைநிறுத்த ஏதாவது கிராமங்களில் ஒரு சிங்களவரோ அல்லது பௌத்த விகாரையோ இருப்பின் அதனை தமிழ்ச் சிங்கள கிராமங்கள் என அடையாளப்படுத்தும் செயற்பாடுகளும் ஆதிக்கச் சட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தமிழ் மண் சிதைவுற்றுள்ளதோடு, தமிழரின் குடித்தொகை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் இருந்து கிழக்கு பிரித்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, தோற்கடிக்கப்பட்ட மக்கள் என்ற மனநிலையுடன் தமிழ் மண் அரசியற் சகதிக்குள் மூழ்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.
நம்பிக்கையற்ற நடைபிணங்களாய் ஈழத் தமிழ் மக்கள் அரசியற் பாலைவனத்தில் தள்ளப்பட்டுள்ளனர் எனவும் மக்கள் தாமாகவே தலைமையேற்று போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இம்மக்கள் போராட்டங்களை மேலும் வலுப்படுத்தவேண்டியது ஒரு மக்கள் இயக்கத்தின் கடப்பாடாகும் எனவும் தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.