முன்னொரு காலத்தில், வடக்கு – கிழக்கில் தமிழ் பேசும் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள். அவர்களால் இங்கு வைக்கப்பட்ட பௌத்த சின்னங்களே இன்றும் இங்கு காணப்படுகின்றன என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் தெரிவித்தார்.
சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரியின் நாவலர் நற்பணி மன்றத்தால் அமைக்கப்பட்ட நாவலர் சிலையை இன்று செவ்வாய்க்கிழமை (23) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் மேலும் கூறியுள்ளதாவது,
சைவ சமயத்தில் தோன்றிய சமய குரவர்கள் நால்வரும் சைவ சமய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்கள். பண்டைய காலத்தில் இலங்கையின் வட, கிழக்கு பிரதேசத்தில் இருந்த தமிழ் மக்கள் கூட சரித்திரப் படி பார்த்தால் இந்து தர்ம முறைப்படியே வாழ்ந்து வந்தவர்கள். கௌதம புத்தரின் தோன்றலுக்கு முன்னையதான சரித்திர சான்றுகளில் இவ்விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பின்னைய பௌத்தத்தின் உள்நுழைவால் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலத்திற்கு பௌத்தத்தால் கவரப்பட்டு பௌத்த சமயிகளாக மாறி, அதன்பின்னர் இந்து சமய குரவர்களின் வரவாலும் அவர்களின் சமய ஆதிக்கத்தாலும் பௌத்தத்தில் இருந்து விடுபட்டு சைவத்திற்கு சென்றவர்களே எமது மூதாதையர்.
ஒருகால கட்டத்தில் தமிழ் பேசும் பௌத்தர்கள் வடக்கு, கிழக்கில் வாழ்ந்ததால் தான் பௌத்த சின்னங்கள் இன்றும் இங்கு காணப்படுகின்றன. அதையே தவறாக சிங்கள பெரும்பான்மையினர் பௌத்தம் வடக்கு கிழக்கில் நிலைபெற்றிருந்ததால் இங்கு வாழ்ந்த மக்கள் சிங்கள மக்கள் தான் என்றும் தமிழர்கள் இந்தியாவில் இருந்து பின்னைய காலத்தில் வந்து சிங்கள மக்களை விரட்டி விட்டார்கள் என்றும் திரிபுபடுத்தி ஒரு வாதத்தை முன்வைக்கின்றார்கள்.
பௌத்த மத தமிழர்களை சிங்களவர் என்று தவறாக பிரசாரம் செய்கின்றார்கள். ஏன் இராவணனையே ஒரு சிங்களவன் என்கின்றார்கள். ‘தெமல பௌத்தயோ’ அதாவது ‘தமிழ் பௌத்தர்கள்’ என்ற ஒரு சிங்கள நூல், பேராசிரியர் சுனில் ஆரியரத்ன என்பவரால் உண்மையை விளக்கி சில காலத்துக்கு முன்னர் எழுதப்பட்டது.
அதன் மறு பிரசுரிப்பை சில பௌத்த பிக்குகள் அண்மையில் தடை செய்துள்ளார்கள். இவ்வாறு தான் உண்மையை வெளிவராமல் பெரும்பான்மையினருள் சிலர் தடுக்க முற்படுகின்றனர். சிங்கள மொழி என்பதன் உற்பத்தியே பௌத்தத்தின் நிமித்தமே எழுந்தது என்பதை இவர்கள் மறந்து விடுகின்றார்கள். புத்த பிக்குகள், பாளி மொழியை இங்கிருந்த தமிழ் மொழிக்குள் உட்படுத்தியே சிங்கள மொழி பிறந்தது.
எனினும் சைவசமயம் மறு சமயங்களால் மங்கிப்போன காலகட்டங்களில் அதனை மேலோங்க வைப்பதற்கு வந்த அவதார புருஷர்கள் தான் எமது சமயகுரவர்கள் நால்வரும் என்று கூறலாம்.
பலவிதமான அற்புதங்களை செய்தும், உணர்வுகளை கனிய வைக்கும் தேவார, திருவாசக பாடல்களை பாடியும் மக்கள் மனதை இறைவன் பக்கம் திருப்பி மீண்டும் சைவத்தை வளர செய்த மகானுபாவர்கள் அவர்கள் என முதலமைச்சர் மேலும் கூறினார்.