வடக்கு கிழக்கில் இராணுவ வீடமைப்புக்கு சீனா 100 மில். டொலர்

வடக்கு, கிழக்கில் இலங்கை இராணுவத்தினருக்கு வீடமைப்பதற்கு என சீனா 100 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படும், இராணுவ நலன்புரித் திட்டங்களுக்கென இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவை போரால் பாதிக்கப்பட்ட இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அறிய வருகிறது.

சீனாவின் இந்த நிதியைப் பயன்படுத்தி வடக்கு, கிழக்கில் உள்ள இராணுவ படைமுகாம்களில் இராணுவத்தினருக்கு வதிவிட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொடுக்க பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அதேவேளை, கொழும்பில் பாதுகாப்பு சேவைகள் கல்லூரியை நவீன மயப்படுத்துவதற்கும் சீனா 1.5 மில்லியன் டொலரை வழங்குவதாக உடன்பட்டுள்ளது. சீனப் பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவாங்லி அடுத்த புதன்கிழமை இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக, இலங்கை இராணுவத்தினருக்கான இந்த நிதியுதவி வழங்க  உடன்பட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கில் இருந்து இலங்கைப் படைகளை குறைக்க வேண்டும் என்று இந்தியாவும், மேற்குலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்ற நிலையில், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் படைமுகாம்கள் அவசியம் என்று இலங்கை அரசாங்கம் கூறிவருகிறது.
அதுவேளை, சீனாவிடம் இருந்து எம்ஏ60 விமானங்களை 105.4 மில்லியன் டொலருக்கு கொள்வனவு செய்யும் உடன்பாட்டிலும் இலங்கை அரசு அண்மையில் கையெழுத்திட்டுள்ளது.
எனினும், இந்த பேரம் இன்னமும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பது குறிப்படத்தக்கது.

Related Posts