வடக்கு கிழக்கில் இணைந்த சமஷ்டி உரிமை உருவாக வேண்டும் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

SURESHவடக்குகிழக்கில் இணைந்த சமஷ்டி உரிமை உருவாக வேண்டுமாயின் வடமாகாண சபைத் தேர்தலை சரியான வழியில் மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்’ என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

சுன்னாகம் பஸ் தரிப்பிட முன்றலில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

‘வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகப் பிரதேசத்தில் சமஷ்டி முறையில் அமைந்த அரசியலமைப்பில் தமிழ் மக்களுடைய தனித்துவம் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும். இந்த இலக்கினை நோக்கிச் செல்வதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் தமிழ் மக்களினதும் கடமையாகும்.

தமிழ் மக்கள் தனித்துவமான தமது பூர்வீக மண்ணில் வாழ்வதற்கான வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். யுத்தத்திற்கு பின்னர் சர்வதேச அழுத்தத்தில் இடம்பெறும் வடமாகாண சபைத் தேர்தலினை சரியான முறையில் பயன்படுத்தி எமது உரிமையை பெற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து பெரும்பான்மையுடன் வெற்றி பெறச்செய்வதன் மூலம் சர்வதேசத்திற்கு எமது பிரச்சனையை எடுத்துச் செல்லவதற்குரிய களமாக அமையும். மாறாக அரச கட்சிக்கு வாக்களிப்பதன் ஊடாக சர்வதேச பார்வையில் தமிழ் இனத்திற்கான பாதகமான சூழ்நிலையே உருவாகும்.

ஏனெனில் அரச கட்சி வெற்றிபெற்றால், அதனை ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் மக்கள் தமது கருத்துக்கே வாக்களித்துள்ளார்கள் என்று எண்ணி இருந்துவிடுவார்கள்.

இந்நிலைமையை உருவாகுவதற்கு தமிழர்களாகிய நாம் சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடாது’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts