வடக்கில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 300 வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வடக்கில் 10,000 ஏக்கர் காணிகளை அபகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது குறித்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே எதிர்வரும் இரண்டு நாட்களில் குறித்த வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.
இதேவேளை
கூழாவடியில் காணிகளை விடுவித்தனர் படையினர் நீதிமன்றில் வழக்கு தாக்கலான நிலையில்
ஆனைக்கோட்டை கூழாவடிப் பகுதியில் தனியார் காணிகளில் அமைக்கப்பட்டிருந்த இராணுவமுகாம், தற்போது அந்தக் காணிகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.
குறித்த காணியைச் சுவீகரிப்பதற்கான அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்த நிலையில் அந்தக் காணி உரிமையாளர்கள் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். யாழ்.குடாநாட்டை 1996 ஆம் ஆண்டு இராணுவம் கைப்பற்றியது. அந்தக் காலப் பகுதியிலிருந்தே, ஆனைக்கோட்டை கூழாவடிப் பகுதியில் 4 பேருக்குச் சொந்தமான தனியார் காணிகளில் இராணுவத்தினர் முகாம் அமைத்திருந்தனர். அதற்குள் வீடுகளும் உள்ளடங்கியிருந்தன.
இராணுவ முகாம் அமைந்துள்ள காணியை சுவீகரிப்பதற்கான அறிவித்தல்களும் ஒட்டப்பட்டன. குறித்த காணியை அளவீடு செய்வதற்குச் சென்ற நில அளவையாளரிடமும், உரிமையாளர்கள் காணிகளை அடையாளம் காட்ட மறுத்து எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
அத்துடன் காணிச் சுவீகரிப்புக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கலும் செய்திருந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாகக் குறித்த இராணுவ முகாமிலுள்ள பொருள்கள் ஏற்றப்பட்டு, 4 உரிமையாளர்களிடமும் வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.