வடக்கு உற்பத்திகளுக்கு வெளிநாட்டில் சந்தைவாய்ப்பு

வடக்கு மாகாணத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் கேள்வியினை அதிகரிக்கும் நோக்குடன் இங்குள்ள உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டும் என வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் விக்னேஸ் தெரிவித்தார்.

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் மன்றத்தின் வடமாகாண காரியாலயத்தின் ஏற்பாட்டில் வடமாகாண உற்பத்திப்பொருட்களுக்கான சர்வதேச சந்தைவாய்ப்பு என்ற தொனிப்பொருளில் ஏற்றுமதியாளர்களுக்கும் வடக்கு மாகாண உற்பத்தியாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெற்றது.

இதற்கான நிகழ்வுகள் யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் விக்னேஸ் தலைமையில் இடம்பெற்றது. அதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏற்றுமதியாளர்களையும் வடக்கு மாகாணத்தில் உள்ள உற்பத்தியாளர்களையும் நேரடியாக சந்திப்பதற்கான நல்ல சந்தர்ப்பமாக அமைகின்றது. இதனால் மிகவும் நன்மையடையப் போகின்றவர்கள் எமது உற்பத்தியாளர்களே.

தென்னிலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஏழு நிறுவனங்கள் இங்கு வருகை தந்துள்ளனர்.

குறித்த நிறுவனங்கள் தெங்கு உற்பத்திப் பொருட்கள், பனை உற்பத்திப்பொருட்கள், சேதனவிவசாயம், உணவு வகைகள் , பழவகைகள் என்பனவற்றை இலங்கையில் உள்ள உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்து ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

எனினும் வெளிநாடுகளில் உள்ள வடக்கு மாகாண மக்கள் தங்களுடைய சொந்த இடங்களில் உண்ட உணவுப்பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப இங்கிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களை விரும்பி கொள்வனவு செய்கின்றனர்.

எனினும் தென்னிலங்கையில் இருந்தே இதுவரை பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. எனினும் வடக்கு மாகாணத்தில் இருந்து கிடைக்கும் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த நிலையில் எதிர்வரும் காலங்களில் வடக்கு மாகாணத்தில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்து ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்றைய கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டது. எனவே வடக்கு மாகாணத்தில் குடிசைக் கைத்தொழிலை மேற்கொள்ளும் உற்பத்தியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாரிய அளவில் ஏற்றுமதி செய்யக் கூடிய உற்பத்தியினை வழங்கினால் பொருளாதாரத்தை ஈட்டக் கூடிய நிலை ஏற்படும்.

எனவே இங்குள்ள உற்பத்தியாளர்கள் சந்தர்ப்பத்தை வாய்ப்பாக பயன்படுத்தி தங்கள் பொருளாதாரத்தில் மேலும் உயர்வடைவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் இங்கிருந்து செல்லும் ஏற்றுமதிப் பொருட்கள் அனைத்து நாடுகளுக்கும் நம்பிக்கையானதாகவும் அதிக கேள்விக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும்.

எனவே தரமான தரமான உற்பத்திகளை மேற்கொள்ளுஙகள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, குறித்த ஏற்றுமதி நிறுவனங்கள் தங்களுடைய ஏற்றுமதி பற்றியும், கொள்வனவு செய்யும் பொருட்கள் பற்றியும் தெளிவு படுத்தினர்.

அதேபோல கலந்து கொண்டிருந்த நூற்றுக்கு மேற்பட்ட உற்பத்தியாளர்களும் தங்களது உற்பத்திகள் குறித்தும் தெரிவித்திருந்தனர்.

Related Posts