வடக்கு இளைஞர்களை உதாசீனப்படுத்தினாரா பிரதமர்?

வடக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடுவதற்கு சென்றிருந்த போதும், பிரதமர் அதனை செவிமடுக்காது வேறு விடயங்கள் தொடர்பாக கவனஞ்செலுத்தியதாக வடக்கு மாகாண இளைஞர் யுவதிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் உள்ளடங்கிய அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்தல், வடக்கு கிழக்கு பகுதிகளில் இளைஞர்கள் யுவதிகள் எதிர்நோக்கும் பிரச்சினை, காணி, அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனோர் விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக வவுனியா அஃப்ரியல் அமைப்பினரால் நேற்று (வியாழக்கிழமை) இளைஞர் யுவதிகள் கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

எனினும், இவ்விடயங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்காத பிரதமர் ரணில், அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மகாநாயக்கர்களின் அறிக்கையொன்றை ஊடகங்கள் வெளியிட்டுள்ள முறை தொடர்பில் அதிருப்தியை தெரிவித்து மிகுந்த ஆவேசத்துடன் அறையை விட்டு வெளியேறியதாக இளைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தோடு, இளைஞர்களை அழைத்துச் சென்ற அஃப்ரியல் அமைப்பின் தலைவருக்கு ஒரு நிமிடம் மாத்திரமே பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், இளைஞர் யுவதிகள் பெரும் ஏமாற்றத்துடன் அங்கிருந்த வந்ததாகவும் இளைஞர் யுவதிகள் தெரிவிக்கின்றனர்.

Related Posts