வடக்கு இராக்கில் உள்ள கிராமம் ஒன்றில் யாசீதி இன ஆண்கள் 80 பேரை ஐஎஸ் (இஸ்லாமிய அரசு) ஆயுததாரிகள் கொன்றுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
இந்த கொலைகள் தொடர்பான கூடுதல் தகவல்களை இராக்கின் பதவிமுடிந்து செல்லும் வெளியுறவு அமைச்சர் ஹோஷ்யார் செபாரி வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக நடத்தப்பட்ட அமெரிக்க ட்ரோன் தாக்குதல்களுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக காவ்ஜூ என்ற கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று செபாரி கூறினார்.
அண்டையிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் யாசீதி மக்களை பாதுகாப்பதாக உறுதியளித்திருந்தபோதிலும், ஐஎஸ் ஆயுததாரிகள் தாக்கும்போது அவர்களும் எதுவும் செய்யமுடியாத நிலையில் இருந்துள்ளதாக ஹோஷ்யார் செபாரி தெரிவித்தார்.
யாசீதி இனப் பெண்களும் சிறார்களும் ஆயுததாரிகளால் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை வெளியுறவு அமைச்சரால் உறுதிசெய்ய முடியவில்லை.
இதனிடையே தமது ட்ரோன் விமானங்கள், பின்னதாக ஆயுததாரிகளின் இரண்டு கவச வாகனங்களை தாக்கியழித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.