வடக்கு அமைச்சர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

sambanthan 1_CIவடக்கு மாகாண சபைக்கான அமைச்சர்களை நியமிப்பதில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இடையே இழுபறி நிலை நீடித்து வருகிறது.

இதனை அடுத்து அமைச்சர் பதவிகளை வகிக்கவிரும்பும் உறுப்பினர்கள் அதற்காக விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறும் அது குறித்து கட்சியின் உயர்பீடம் இறுதி முடிவு எடுக்கும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

வடக்குமாகாண சபையைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை அமைச்சுக்களை வழங்குவது தொடர்பில் தொடர்ச்சியாக அங்கத்துவக் கட்சிகளிடையே கலந்துரையாடல் நடத்திவருகின்றது.

கொழும்பில் நேற்றிரவு இடம்பெற்ற கலந்துரையாடலில் இறுதி முடிவு எட்டப்படும் என்று எதிரபார்க்கப்பட்ட போதும் அது இடம்பெறவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் சகல அங்கத்துவக் கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மாலை 6 மணியளவில் ஆரம்பமான கலந்துரையாடல் இரவு 9 மணி வரை நீடித்தது. இந்தக் கலந்துரையாடலில் ஆரம்பத்தில் தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றியதைத் தொடர்ந்து முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் உரையாற்றினார்.

அதன் பின்னர் கலந்துரையாடல் ஆரம்பமானது. இந்தக் கலந்துரையாடலில், இலங்கைத் தமிழரசுக் கட்சி தனக்கு இரண்டு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. மறுபுறத்தில் எஞ்சிய மூன்று கட்சிகளும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என விடாப்பிடியாக இருந்தனர்.

நீண்ட நேர விவாதத்தின் பின்னர், அமைச்சுப் பதவிகள் தேவையானவர்கள் கட்சித் தலைமைக்கு விண்ணப்பிக்குமாறும் அதன் பின்னர் அது தொடர்பில் ஆராயலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாளை வெள்ளிக்கிழமை காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சித் தலைவர்களிடையே கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

தொடர்படைய செய்தி

கூட்டமைப்பின் நேற்றைய கூட்டமும் முடிவின்றி முடிந்தது

Related Posts