வடக்கு அமைச்சர்கள் விவகாரம் மீள் பரிசீலனை

ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத வடக்கு மாகாண அமைச்சர்கள் இருவரை தொடர்ந்து பணியில் அமர்த்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக, தான் நடவடிக்கை எடுப்பதாக வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நல்லை ஆதீன முதல்வர் மற்றும் யாழ். ஆயருடனான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண சபையில் வெடித்துள்ள பிரச்சினையை சமரசமாக தீர்க்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ள சமய தலைவர்கள், இன்று (திங்கட்கிழமை) காலை வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து மூன்று விடயங்கள் அடங்கிய கோரிக்கை கடிதமொன்றை கையளித்துள்ளனர்.

குறிப்பாக, குற்றம் நிரூபிக்கப்படாத அமைச்சர்கள் இருவரை மீள இணைத்துக்கொள்வதற்கு ஆவன செய்யவேண்டுமென கேட்டுக்கொண்ட சமய தலைவர்கள், விசாரணைக்கு குந்தகம் ஏற்படாத வகையில் குறித்த அமைச்சர்களுடன் தாம் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்ட கடிதத்தை மீளப் பெற வேண்டும் என்றும், முதலமைச்சர் தனது பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல தமிழரசுக் கட்சி பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மற்றும் சமய தலைவர்கள் தம்முடன் கலந்துரையாடியதன் அடிப்படையில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத இரு அமைச்சர்களையும் தொடர்ந்து பணியில் அமர்த்துவது தொடர்பாக தான் நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சருடனான சந்திப்பைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை சந்தித்த சமய தலைவர்கள், குறித்த கடிதத்தை அவரிடமும் கையளித்துள்ளனர்.

Related Posts