கடந்த ஆட்சிக்காலத்தில் வடக்கையும் தெற்கையும் இணைப்பதற்கான பாலங்களை அமைத்தார்கள். ஆனால், இந்த அரசாங்கத்தினால், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான மனரீதியான பாலத்தினை அமைக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளோம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், நேற்று வியாழக்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அங்கஜன், ‘தேசிய கட்சி என்றாலே, அது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தான் என, முன்னொரு காலத்தில், தமிழ் மக்களால் இனங்காணப்பட்டிருந்தது. அதைத் தாண்டி, எமது கட்சி என்ற ரீதியில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தற்போது, தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. இம்முறை, 65ஆம் ஆண்டு கட்சிக் கொண்டாட்டங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இருந்து, பல ஆதரவாளர்கள் கலந்து கொள்வார்கள்’ என்று அவர் மேலும் கூறினார்.