வடக்குத் தேர்தல் நடப்பது சந்தேகமே!; சம்பந்தன் நேற்றுத் தெரிவிப்பு

sambanthan 1_CIவடக்கு மாகாணத் தேர்தல் நடைபெறுவது சந்தேகம் தான். அப்படியும் தேர்தல் நடந்தால் அதற்கு முன்னரே தமிழ் மக்களின் கைகளில் துளியளவு அதிகாரமும் சென்றுவிடாமல் தடுப்பதற்கான அனைத்துக் காரியங்களையும் அரசு செய்து முடித்துவிடும் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்.

திருகோணமலை சில்வெஸ்டர் ஹோட்டலில் நேற்றுக்காலை நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போதே சம்பந்தன் மேற்படி கருத்தைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:

புலம் பெயர் மக்கள் வாக்களிப்புக்கான சட்டம் விரைவில் கொண்டு வரப்படவுள்ளது. அது எமது வாக்குப் பலத்தை அதிகரிக்கக் கூடும். வட மாகாணத் தேர்தலை மையப்படுத்தியே இந்த சட்டமூலம் வரவுள்ளது என நான் நம்புகிறேன்.

கிழக்கு மாகாண சபையில் மூன்று மாவட்டங்களிலும் தலா ஒரு உறுப்பினர் அதிகரித்திருந்தால் இன்று மாகாண நிர்வாகம் எமது கைகளில் இருந்திருக்கும்.

நமது மக்கள் வாக்களிப்பில் தீவிரம் காட்டி இருந்திருந்தால் அது நடந்திருக்கும்.தற்காலிகமாக இடம் பெயர்ந்து வாழும் மக்கள் தங்களைப் பதிவு செய்வதில் கவனமாக இருத்தல் வேண்டும்.

சில பகுதிகளில் மக்கள் வாழாது இருக்கலாம். ஆனால் பதிவு செய்யாது இருப்பது தவறானதொன்று.

மேலும், மனித உரிமை மீறல், மனிதாபிமான நெருக்கடி போன்ற விசேடமாக ஆட்சியாளர்கள் எம்மை புறக்கணித்து எமது உரிமைகளை மறுக்க முயற்சிக்கும்போது அதனை எதிர்க்க உள்ள ஒரே வழி இந்த வாக்குப்பலம்தான்.

தமிழர்களுக்கான அரசியல் அந்தஸ்தைக் கொடுக்க அரசு தயாராக இல்லை. இன்று எமது பிரச்சினை எல்லை தாண்டி ஐக்கிய நாடுகள்சபை வரை சென்றுள்ளது.

நாங்கள் பெரும்பான்மை சமூகத்துடன் இணைந்து வாழ விரும்புகிறோம். எமது கலாசாரப் பரம்பரியத்திற்கு ஏற்ற தீர்வொன்றை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக உள்ளோம்.

விடுதலைப் புலிகளை அழிக்க பல நாடுகள் உதவி உள்ளன. அந்த நாடுகளுக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. நாங்கள் இந்த நாட்டில் பிறந்தவர்கள். உங்களுக்கு இங்கு என்ன உரிமை உள்ளதோ, அது எங்களுக்கும் உள்ளது.

எனவே புதிதாக நாங்கள் எதனையும் கேட்கவில்லை. பல்வேறு நாடுகளிலும் பல்வேறு மக்களும் வாழும் உரிமையைத்தான் கேட்கின்றோம் என்றார்.

Related Posts