வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கனேடிய அரசும் கவனத்தைச் செலுத்துவதாக அந்நாட்டுத் தூதுரகத்தின் அரசியல் ஆலோசகர் மேகன் பொஸ்ரர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்துக்கான பயணத்தை மேற்கொண்டு வருகைதந்த கனேடியத் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் மேகன் பொஸ்ரர் நேற்று வியாழக்கிழமை கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் சந்திப்பை நடத்தினார்கள்.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர் த.குருகுலராஜா, கிளிநொச்சி மாவட்ட இளைஞரணித் தலைவர் சு.சுரேன், கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் நா.வை.குகராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில், வடமாகாணத்தின் கள நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மீது இராணுவத்தினராலும், அரச தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
சிவில் பாதுகாப்புப் படையினரால், முன்பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் ஆளும் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் எனவும் நெடுந்தீவிலும், யாழ்.நகரிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆளும் கட்சியினரால் தாக்கப்பட்டனர் என்றும் இதன்போது சுட்டிக் காட்டப்பட்டது.
ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் இலங்கை வருகை காரணமாகவே தேர்தல் வன்முறைகள் குறைந்திருப்பதாகவும், இல்லாவிட்டால் இதைவிட அதிகளவான தேர்தல் வன்முறைகள் இடம்பெறும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் இந்தச் சந்திப்பின்போது எடுத்துரைக்கப்பட்டது.
அத்துடன் பூநகரிப் பிரதேசத்தில் இளம் குடும்பப் பெண் சீருடையினரால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் கனேடியப் பிரதிநிதிக்கு எடுத்துக் கூறப்பட்டது.
இதன்போது, வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும், இங்கு இடம்பெறும் விடயங்கள் தொடர்பிலும் தாம் அவதானம் செலுத்துவதாக கனேடியத் தூதரக ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.