கொழும்பில் டி.எஸ்.சேனநாயக்கா கல்லூரி கால்பந்தாட்ட அணிகள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகிய கல்லூரிகளின் கால்பந்தாட்ட அணிகளுடன் சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றியது.
வடக்கு தெற்குப் பாடசாலை அணிகளுக்கிடையில் நட்புறவு மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நோக்கங்களுக்காக இந்தக் கால்பந்தாட்டப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
சேனநாயக்கா கல்லூரி கடந்த 37 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வருகை தந்து யாழ்ப்பாணத்திலுள்ள கல்லூரிகளுடன் கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றியிருந்தது. அதன் பின்னர் கடந்த சனிக்கிழமை (23) யாழ்ப்பாணம் வருகை தந்து போட்டிகளில் பங்குபற்றியுள்ளது.
கடந்த சனிக்கிழமை (23) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 13, 15, 17 மற்றும் 19 வயதுப்பிரிவு அணிகளுடன் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் போட்டிகளில் பங்குபற்றின.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (24) தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியுடன் மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் போட்டிகளில் பங்குபற்றியது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, சேனநாயக்கா கல்லூரி அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டிகளில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 13 வயதுப்பிரிவில் 2:0 என்ற கோல் கணக்கிலும், 15 வயதுப்பிரிவில் 3:2 என்ற கோல் கணக்கிலும், 17 வயதுப்பிரிவில் 7:0 என்ற கோல் கணக்கிலும், 19 வயதுப்பிரிவில் 5:0 என்ற கோல் கணக்கிலும் வெற்றிபெற்றன.
தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி, சேனநாயக்கா கல்லூரி அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டிகளில், 13 வயதுப்பிரிவில் சேனநாயக்கா கல்லூரி அணி 1:0 என்ற கோல் கணக்கிலும், 15 வயதுப்பிரிவில் மகாஜனாக் கல்லூரி அணி 2:0 என்ற கோல் கணக்கிலும், 17 வயதுப்பிரிவு ஆட்டம் 1:1 என்ற சமநிலையிலும், 19 வயதுப்பிரிவில் மகாஜனாக் கல்லூரி அணி 5:0 என்ற கோல் கணக்கிலும் வெற்றிபெற்றன.