வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்த வடக்குக் கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி ஆட்சிமுறை தொடர்பான கருத்துக்களை நான் முற்றாக நிராகரிக்கின்றேன் என சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இடம்பெற்ற முஸ்லிம் அரசியல் தரப்புடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இனவாத சிந்தனைகளால் நாடு பிளவுபடுவதை நான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. நாட்டில் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காக தசாப்த கால யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.
அனைத்து இன மக்களிடமும் ஒற்றுமையை வலியுறுத்தும் என்னை இனவாதியாக நோக்குகின்றனர். நான் ஒரு இனவாதி அல்ல. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த ஒரே காரணத்தினாலேயே என்னை அனைவரும் குற்றவாளியாக நோக்குகின்றனர். ஏனெனில், அவ்வாறு அனைவரும் சுதந்திரமாக செயற்படக்கூடிய சூழ்நிலையை நாட்டில் நான் ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன்.
ஆனால் தற்போது மீண்டும் இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகள் மேலோங்கி வருகின்றன. யுத்தத்திற்கு பின்னர் இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியிலும் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டு, கடைகளுக்கு தீவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதே முன்பு இடம்பெற்றிருந்தால் என் மீது பழி போட்டிருப்பார்கள்.
ஆனால், இனியும் கடந்த காலம் குறித்து பேசி எதையும் சாதிக்க முடியாது. எனவே கடந்த கால செயற்பாடுகளை படிப்பினையாக கொண்டு எதிர்க்காலத்தை திட்டமிடல் வேண்டும். எனவே, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், இனவாதத்தை வேரோடு அழிக்கவும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என என்றும் தெரிவித்தார்.