வடக்குக்கான அதிகாரத்தை அர்த்தமற்றதாக்க அரசு சதி – முதலமைச்சர்

vickneswaranஅரசின் சுயரூபம் இப்போது தான் வெளிப்படுகின்றது. எங்களுக்கு வழங்கிய அதிகாரத்தை எப்படி அர்த்தமற்றதாக்கலாம் என்பதில் ஆளுநருடன் சேர்ந்து அரசு செயற்படுகிறது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

எமக்கான அதிகாரப் பகிர்வைச் சிதைக்கச் சதி நடக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டி னார். சாவகச்சேரி பிரதேச சபையின் உள்ளூராட்சி வார பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றபோது, அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

அரசு சார்பானவர்களுக்கு மக்கள் தேர்தலில் தகுந்த பதிலை வழங்கியுள்ளனர். இருப்பினும் அரசு சார்பானவர்கள் அதை உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. மத்திய அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாகாணத்தின் மீது திணிக்கவே பார்க்கின்றார்கள். மக்களின் நன்மதிப்பைப் பெறத் தவறியவர்கள் கட்டளையிடுகின்றனர்.

முன்னர் தமது கையாள்களாகப் பயன்படுத்திய அரச அலுவலர்களை தமக்கு ஆதரவாகச் செயற்பட வற்புறுத்தி வருகின்றார்கள். இதனால் மக்களின் தேவைகள், அவர்களுக்கான சேவைகள் பாதிப்படைகின்றனவே என்ற எண்ணம் அவர்களுக்கு சற்றேனும் இல்லை.

அரசும், மாகாண சபையும் இணைந்து நடந்தால் தான் மாகாண சபை நிர்வாகமும், பிரதேச சபைகளின் நிர்வாகமும் வெற்றி பெற முடியும். நானா, நீயா என்ற பாணியில் ஒருவரின் உரித்துக்களை மற்றவர்கள் பாவிக்க நினைத்தால் முரண்நிலைதான் உருவாகும். மக்கள் நன்மை கருதித்தான் நாங்கள் பொறுமையாகத் தடம் பதித்து வருகின்றோம்.

இதுவரை காலமும் அரச அதிகாரம், இராணுவப் பலம், அனுசரணைப் படையின் அட்டூழியங்கள் போன்றவற்றின் உதவியுடன் நடத்தி வந்த அரச நிர்வாகத்தைத்தான் மக்கள் நிராகரித்து விட்டார்கள்.

அதை அரசு சார்பான அதிகாரம் படைத்தவர்கள் புரிந்து கொண்டு நடக்கப் பழக வேண்டும். இராணுவத்தைத் தொடர்ந்தும் மாகாணத்தில் இருக்கவிட்டு அதன் அரவணைப்பில் குளிர்காயலாம் என்று எண்ணுவது மடமை.

எனவே மக்கள் நன்மதிப்பையும், ஆதரவையும் பெற்றவர்கள் தத்தமது கடமைகளில் ஈடுபட வழியமைத்துக் கொடுப்பதின் அவசியத்தைச் சகலரும் உணருவார்கள் என்று நம்புகின்றோம்.

13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரம் போதுமானதா என்பது இதுவரை பரீசீலிக்கப்படவில்லை. ஏனெனில் மத்தியில் இருப்பவர்களே மாகாணத்தில் இருந்தார்கள்.

தற்போது எமக்கு அதிகாரப் பகிர்வு கிட்டியதும் அரசின் சுயரூபம் தெரிகின்றது. ஆளுநருடன் சேர்ந்து அதிகாரப் பகிர்வை அர்த்தமாற்றதாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எங்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடைத்ததும் அதைச் சிதைக்கச் சதி நடக்கின்றது.

ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்கள் தமது உயிர்களைப் பலி கொடுத்தது, இவ்வாறான சில்லறைச் சதிகளுக்கு ஆளாகவல்ல. மாகாண சபையை நாம் நடத்த இடையூறு செய்யப்படும் சதிகள் யாவும் தமிழர்களுக்கு இதுவரையில் இழைக்கப்பட்ட அநீதிகளை வெளிக்காட்டும்.

அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள் அதிகாரிகள் எம்மை இயங்க விடாமல் செய்யப் பார்க்கின்றார்கள். ஒரு வேளை அரசுக்கும் எமக்கும் இடையில் நெருங்கிய உறவு அடுத்த தேர்தலில் ஏற்பட்டால் தமது பாடு இக்காட்டாகி விடும் என்பதால் அவ்வவாறு செய்கிறார்களோ தெரியவில்லை.

எது எவ்வாறு இருப்பினும், உள்நாட்டு விடயங்களை இப்பொழுதும் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும் என்றே நாம் நம்புகின்றேன்.

என்று முதலமைச்சர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

Related Posts