அரசியல் கைதிகளின் குடும்பங்கள், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மற்றும் பிள்ளைகளை இழந்த பெற்றோர் என 860 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் இவ்வருட இறுதிக்குள் வழங்கப்படும் என வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
குறித்த குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் பொருட்டு, எனது அமைச்சினூடாக 43 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது. 12 ஆயிரத்து 676 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. மேற்படி குடும்பங்களுக்கு நிலையான வருமானத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்களின் விருப்பத் தெரிவுக்கு ஏற்ப உதவிகள் செய்யப்படுகின்றன.
இதில் முதற்கட்டமாக 124 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டன. அவர்களில் 26 குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சுயதொழில் அல்லது சுயமுயற்சிக்கான உள்ளீடுகள் வழங்கப்பட்டுள்ளன. மிகுதி 98 குடும்பங்களுக்கு இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும்.
அத்துடன், இந்த வருட இறுதிக்குள் மொத்தமாக 860 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம். எமக்கு வடமாகாணத்துக்கு வெளியிலுள்ள குடும்பங்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் கிடைத்தன.
ஆனால் வடமாகாண நிதியை வெளியில் பயன்படுத்த முடியாது. இதனைக் கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் புலம்பெயர் வாழ் உறவுகளிடமிருந்து நிதிகள் பெறப்பட்டு, வடமாகாணத்துக்கு வெளியில் வாழும் இவ்வாறான குடும்பங்களுக்கு உதவிகள் செய்யப்படும் என்றார்.