வடமாகாணத்திலுள்ள மூன்று பொலிஸ் நிலையங்களின் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக பொலிஸ் ஆணைக்குழுவின் வடமாகாண பணிப்பாளர் க.தியாகராஜா திங்கட்கிழமை (24) தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டம் நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொலிஸார், யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொலிஸார், கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு எதிராகவே பொதுமக்களினால் இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கோப்பாய் பொலிஸ் நிலையத்திலுள்ள பொலிஸார் ஒருவர், வெளிநபர் ஒருவருக்கு ஆதரவாக தம்மை மிரட்டி தமக்கு எதிராக நடவடிக்கையை மேற்கொள்வதாக பொதுமகன் ஒருவரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணம் மற்றும் நெடுங்கேணி ஆகிய பொலிஸ் நிலையங்களில் பொதுமக்களினால் செய்யப்பட்ட முறைப்பாடுகளை உரிய முறையில் விசாரிக்கவில்லை என இம் முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக அந்தந்த பொலிஸ் நிலையங்களின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அல்லது உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் விசாரணை அறிக்கையினை பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கும்படி கேட்கப்பட்டுள்ளதாகப் ஆணைக்குழுவின் வடமாகாண பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.