மாகாண சபை உருவாக்கத்தின்பின்னர் வட மாகாண கல்வி அமைச்சில் 1500 பட்டதாரிகளிற்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தெரிவித்தார்.
இது தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
வட மாகாணத்தில் அதிக பட்டதாரிகள் வேலையற்றுக் காணப்படுகின்றனர். இது தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. மத்திய அரசின் வேலைவாய்ப்புக்களிலும் மாகாண அரசும் முடிந்த வேலைவாய்ப்பினை வழங்கி பட்டதாரிகளின் கோரிக்கையை நிவர்த்தி செய்ய ஆவன செய்யவேண்டும்.
இதேவேளை, வட மாகாண கல்வி அமைச்சானது இதுவரையில் மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரிய வெற்றிடங்களிற்காக மாகாண சபையின் உருவாக்கத்தின்பின்னர் தற்போதைய நியமனம் வரையில் 1500 பட்டதாரிகளிற்கு நியமனம் வழங்கியுள்ளது.
அதன் பிரகாரம் 2014ம் ஆண்டில் 25 பட்டதாரிகளிற்கும், 2015ம் ஆண்டில் 319 பட்டதாரிகளிற்கும், 2016ம் ஆண்டில் 597 பட்டதாரிகளிற்கும் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதோடு கடந்த ஆண்டில் பெறப்பட்ட மற்றுமோர் அனுமதியின் பிரகாரம் தற்போது 559 பட்டதாரிகளிற்கு ஆசிரிய நியமனம் வழங்கப்படுகின்றது.
இந்த வகையில் வட மாகாண சபையின் உருவாக்கத்தின் பின்னர் மாகாண கல்வி அமைச்சின் நடவடிக்கையின் மூலம் இதுவரையில் 1500 பட்டதாரிகளிற்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று இந்த ஆண்டில் மேலும் ஆயிரம் பட்டதாரிகளை நியமிப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றது என்றார்.