வடக்கு மாகாணத்தின் 14 மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான கோரிக்கையினை மத்திய கல்வி அமைச்சிற்கு வழங்குவதற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த தகவலை மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. அவரது ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வடமாகாணத்தின் பல பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான அனுமதியினை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையினை அண்மைக்காலமாக ஆளுநரிடம் முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையிலேயே மாகாண ஆளுநர் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.
ஏனைய எட்டு மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடமாகாணத்தின் தேசிய பாடசாலைகள் 2 சதவீதமாக காணப்படும் அதேவேளை ஏனைய மாகாணங்களின் தேசிய பாடசாலைகள் 3.5 சதவீதமாக காணப்படுகின்றது.
வடமாகாணத்தின் தேசிய பாடசாலைகளையும் சராசரியாக 3.5 சதவீதமாக கொண்டுவரும் நோக்கில் 14 பாடசாலைகளை தரமுயர்த்துவதற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அத்துடன் குறித்த 14 பாடசாலைகளும் மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் கட்டாயம் பிரதிநிதித்துவம் செய்யவேண்டுமென்றும் அவற்றை தெரிவு செய்து அனுப்பும் பொறுப்பு அந்தந்த மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகளுக்கே உள்ளதெனவும், அவர்கள் கூடியவிரைவில் பாடசாலைகளை தெரிவுசெய்து ஆளுநருக்கு அனுப்பி வைக்குமாறு ஆளுநர் கேட்கப்பட்டுள்ளது – என்றுள்ளது.