வடக்கில் 10,000 பொருத்துவீடுகளை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 10 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மூத்த அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி கொழும்பிலுள்ள ஆங்கிலக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பொருத்து வீடுகளை அமைத்துதருமாறு மக்கள் கோருவதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்தார்.

10 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உறுதிப்படுத்திய போதிலும், இந்த அனுமதி நிபந்தனையுடன் கூடியது என தெரியவந்துள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 65 ஆயிரம் பொருத்துவீட்டு திட்டத்தை அமுல்படுத்த மீள்குடியேற்ற அமைச்சர் கடந்த ஆண்டு நடுப்பகுதியில் இருந்து முயற்சித்துவருகின்றார்.

எவ்வாறாயினும் சிவில் சமூகம், வீடமைப்பு நிபுணர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட உள்ளுர் மற்றும் தேசிய ரீதியான அரசியல்வாதிகளின் கடுமையான எதிர்ப்பு காரணமாக இந்த திட்டம் தாமதமடைந்துவருகின்றது.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அடங்கலாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவும் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் அரச அதிபர்களை கடந்த வியாழக்கிழமை கொழும்பிலுள்ள தனது அலுவலகத்திற்கு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அழைத்திருந்தார்.

Related Posts